
Tamil Nadu political situation : தமிழ்நாட்டில் 'நிலையான' ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் விரும்புவதால், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்த பிறகுதான் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்க முடியும் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விஜய் எப்போது தனது எம்.எல்.ஏ-க்கள் பலத்தை நிரூபிக்கிறாரோ, அப்போது அவர் முதல்வராகப் பதவியேற்கலாம் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதற்கிடையில், விஜய்யை உடனடியாக மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்க வைக்க வேண்டும் என்று கோரி, த.வெ.க ஆதரவாளர்கள் லோக் பவனுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த சம்பவங்கள் நடந்து வருகின்றன. முன்னதாக, த.வெ.க தலைவர் விஜய், ஆளுநர் அர்லேகரை இரண்டாவது முறையாகச் சந்தித்துப் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ-க்கள் உட்பட மொத்தம் 112 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
விஜய், தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றிலிருந்து விலகுவார். இதனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டசபையின் பலம் 233 ஆகக் குறையும். அப்போது, பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏ-க்கள் தேவைப்படுவார்கள். விஜய்க்கு 112 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதால், அவருக்கு இன்னும் ஐந்து எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் பதவி ஏற்க வேண்டும் என ஆளுநர் முரண்டு பிடித்து வருவதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதெல்லாம் பாஜக-வின் செயல் என்றும் விமர்சித்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட் ஆக, திமுக கூட்டணி கட்சிகளான விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவர்களிடம் ஆலோசனை நடத்திய மு.க.ஸ்டாலின், அவர்களை திமுக கூட்டணியிலேயே தொடருமாறு அறிவித்தி உள்ளாராம். இதனால் விஜய்யால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அழைக்க வேண்டும் என்றும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் வியாழக்கிழமை வலியுறுத்தினார். மாநில அரசியலில் பாஜக தலையிட்டு குழப்பத்தை உருவாக்குவதாகவும் குற்றம் சாட்டினார். ஆதரவு கோரி விஜய்யிடமிருந்து தங்களுக்குக் கடிதம் வந்துள்ளதாகவும், அது குறித்து விரைவில் தங்கள் கட்சி முடிவெடுக்கும் என்றும் திருமாவளவன் கூறினார். மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்துள்ளதால், விஜய் ஆதரவு கோரியுள்ளார். எனவே, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு, அவரைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் விசிக தலைவர் கூறினார்.