
வடகிழக்குப் பருவமழையை ஒட்டித் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆய்வு செய்தார்.
சென்னை எழிலகத்தில் உள்ள அவசரக்கால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்ற அவர், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்தும், நிவாரணப் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
"எந்த அளவுக்குப் பெரிய மழையையும் சமாளிக்க அரசு தயாராக இருக்கிறது. பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திட்டமிட்டு எடுத்திருக்கிறோம்.
மாநிலத்தில், குறிப்பாக தேனி, விருதுநகர், இராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பொழிந்துள்ளது. அதி கனமழை பெய்த பகுதிகளில்கூட, இதுவரை எந்தவிதமான அபாயமும் ஏற்படவில்லை.
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான செய்தியைக் கூறுகிறார். அதில் உண்மை இல்லை. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் நெல்லை சேமித்து வைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்."
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். பருவமழை காலங்களில் அரசு எடுத்துள்ள தயார்நிலையை உறுதிப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மேற்கொண்ட இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.