செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

By Manikanda PrabuFirst Published May 9, 2024, 5:15 PM IST
Highlights

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் திருத்தங்கல்லைச் சேர்ந்த சரவணன்  என்பவருக்கு சொந்தமான சுதர்சன் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த தனியார் பட்டாசு ஆலையில், 200க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.

இந்த நிலையில், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வழக்கம்போல் பட்டாசு தொழிலாளர்கள் தங்களது பணியை துவங்கினர். பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு அறையில் ஏற்பட்ட வெடி விபத்தானது அடுத்தடுத்த அறைகளுக்கு பரவி 7க்கும் மேற்பட்ட அறைகள் சேதமாகின.

இந்த வெடி விபத்தில் சிக்கி பெண்கள் 5 பேர், ஆண்கள் 3 பேர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நாய் வளர்ப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு!

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (9.5.2024) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!