
சேகர் கூட்டாளிகளான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், ஆகியோரிடம் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சட்ட விரோதமாக 131 கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக கூறி சிபிஐ தொழிலதிபர் சேகர் ரெட்டியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்தது. மேலும் அவரது கூட்டாளிகள் பிரேம்குமார், சீனிவாசலு,திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், ஆகியோரை கைது செய்தனர்.
இதையடுத்து 5 பேரும் ஜாமீன் கோரி மனு அளித்தனர். சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் மார்ச் மாதம் 17ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து சேகர் ரெட்டி உள்ளிட்ட மூன்று பேரையும் அமலாக்கத்துறை திடீரென கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.
பின்னர், ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மூன்று பேரையும் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது.
இந்நிலையில், விஜயபாஸ்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து திண்டுக்கல் ரத்தினம்,புதுக்கோட்டை ராமச்சந்திரன், ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.