சென்னையில் வீதி மக்கள் சந்திப்பின்போது, அமைச்சர் சேகர் பாபு, கவரிங் கம்மல் அணிந்திருந்த மூதாட்டியின் கஷ்ட நிலையறிந்து, உடனடியாக தங்கக் கம்மல் வாங்கித் தந்துள்ளார். மேயர் பிரியாவும் உதவினர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வீதி வீதியாக மக்களைச் சந்திக்கச் சென்ற அமைச்சர் சேகர் பாபு, தன்னைச் சந்தித்த ஒரு மூதாட்டிக்கு தங்கக் கம்மல் பரிசாக வழங்கினார்.
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் மாநகராட்சி மேயர் பிரியாவும் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்தனர். அப்போது ஒரு மூதாட்டி அமைச்சர் சேகர் பாபுவிடம் பேசினார். அமைச்சர் அவரிடம், ஏதாவது உதவி தேவைப்படுகிறதா எனக் கேட்டார்.
"எனக்கு ஒரு நல்ல வேலை இல்லை. ரொம்ப கஷ்டப்படுறேன். இங்கே ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறேன்" என்று கூறினார். அப்போது, மூதாட்டி அணிந்திருந்த கம்மல், மூக்குத்தியை எல்லாம் கவனித்த அமைச்சர், இதெல்லாம் தங்கமா என்று விசாரித்தார்.
"எல்லாம் கவரிங்தான். பாருங்க" என பதிலளித்தார் மூதாட்டி. அதனை மறுத்த அமைச்சர், "நான் உனக்கு தங்கக் கம்மல் வாங்கித் தருகிறேன்" என்று கூறினார். உடனே தனது உதவியாளரிடம் கூறி மூதாட்டியின் விவரங்களைக் குறித்துக்கொள்ளச் சொன்னார்.
சிறிது நேரத்தில் திரும்ப மூதாட்டியைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, தங்கக் கம்மலை மூதாட்டியின் காதில் போட்டுவிட்டார். மேயர் பிரியாவும் மூதாட்டியின் இன்னொரு காதில் கம்மலை மாட்டிவிட்டார். இன்ப அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அமைச்சருக்கும் மேயருக்கும் நன்றி தெரிவித்தார்.
வீதியில் தன்னைச் சந்தித்த மூதாட்டிக்கு அமைச்சர் சேகர்பாபு தங்கக் கம்மல் பரிசாகத் தந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.