தமிழக மக்கள் மாதந்தோறும் மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்புப் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை, கோவை மாவட்டம் சோமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
தொடங்கிவைத்த பின் 21 தொகுப்புகள் அடங்கிய பொங்கல் பரிசை பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மாநிலம் முழுவதும் இன்று பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 10, 78, 484 குடும்பங்களுக்கு, வரும் 10-ம் தேதிவரை பொங்கல் பரிசுத் தொகை, பரிசுப்பொருள்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் நடைமுறைக்கு வரும். தற்போதைய சூழலில் மின் கணக்கீட்டாளர் 50 விழுக்காடு பற்றாக்குறை உள்ளது. இதனால், வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாதம் தோறும் மின் கட்டண கணக்கீட்டுத் திட்டத்தில் டிஜிட்டல் மீட்டர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்தினால், மின் கட்டண கணக்கீட்டுப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்க வாய்ப்புள்ளது. எனவே, டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் பணிகள் முழுமையாக நிறைவடையும்பட்சத்தில் கணக்கீட்டாளர் பணிக்கு ஆட்கள் பூர்த்திசெய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும், தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல மாதம் தோறும் மின் கட்டணம் நடைமுறை விரைவில் நிறைவேற்றப்படும்’ என்று கூறினார்.