தமிழ் மீது வெறுப்பை காட்டும் நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்- ஆளுநருக்கு எதிராக சீறும் ரகுபதி

Published : Feb 28, 2025, 01:12 PM ISTUpdated : Feb 28, 2025, 01:24 PM IST
தமிழ் மீது வெறுப்பை காட்டும் நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்- ஆளுநருக்கு எதிராக சீறும் ரகுபதி

சுருக்கம்

தமிழகத்தில் இந்தி திணிப்பு குறித்து ஆளுநர் ரவியின் கருத்துக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இருமொழிக் கொள்கையால் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், ஆளுநரின் வெறுப்பு அரசியலை கண்டித்தும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இரு மொழியால் தமிழக இளைஞர்கள் பாதிப்பு

தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இந்தியை எதிர்ப்பதால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.  ஆளுநர் ரவி இன்று வெளியிட்டிருந்த அந்த எக்ஸ் தள பதிவில், மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்.  துரதிருஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட  படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள் என தெரிவித்திருந்தார். 

தமிழ் மீது ஆளுநருக்கு வெறுப்பு

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பொருளாதாரத்திலும் கல்வியிலும் பெற்றிருக்கும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தமிழ்நாட்டின் மீது வெறுப்பை உமிழ்வதையே தனது கடமையெனக் கருதி செயலாற்றி வருகிறார் ஆளுநர் ரவி. தனது அரசியலமைப்பு கடமைகளை மறந்து ஆதாரமற்ற அவதூறுகளை வைத்து தமிழ்நாட்டை இழிவுப்படுத்தும் அரசியலை செய்வதற்காகவே ஒன்றிய பாஜக அரசு ஆர்.என்.ரவியை ஆளுநராக வைத்திருக்கிறது.

புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது

தனது சமூக வலைதளக் கணக்கை இதற்காகவே பிரதானமாக பயன்படுத்திவரும் ஆளுநர் ரவி தனது இன்றையப் பதிவில்"இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது. தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள்" எனக் கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு எதில் பின் தங்கியுள்ளது என ஆளுநர் ரவியால் சொல்ல முடியுமா? கல்வியில், மருத்துவத்தில், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களே சொல்லும். அதையெல்லாம் ஆளுநர் ரவி படித்தால்தானே? படித்தாலும் தமிழ்நாட்டின் மீது வெறுப்பேறிய கண்களுக்கு அவையெல்லாம் எப்படித் தெரியும்?

தமிழ் மீது ஆளுநருக்கு வெறுப்பு

தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி இருமொழிக் கொள்கையினால் சாதித்தவை. தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணிக்கலாம் அதற்கு புதிய கல்விக் கொள்கையை ஒரு வழியாக வைத்து உள்நுழையலாம் எனும் ஆதிக்கவாதிகளின் சதியை அறியாதவர்களா தமிழர்கள்? தமிழ்-தமிழ்நாடு-தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றின் மீது தொடர்ந்து வெறுப்பை உமிழும் ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி பாடம் எடுக்க வேண்டாம்.

சனாதனத்தையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் காலூன்றச் செய்திட குட்டிக்கரணம் போடும் ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழ் மண்ணில் வேறூன்றவில்லை. அப்படித்தான் மும்மொழி கொள்கையும் மூக்கறுபட்டு நிற்க போகிறது. மொழித் தேர்வு எது? மொழித் திணிப்பு எது? என்பது எங்களுக்கு தெரியும். இந்த நாடகங்கள் எல்லாம் இங்கே எடுபடாது என ரகுபதி தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

TN Heavy Rain Alert : தமிழகத்தில் நாளை கனமழை எச்சரிக்கை.. 8 மாவட்டங்களுக்கு அலர்ட் – உங்கள் மாவட்டம் இதில் இருக்கிறதா?
Blood Donation Clubs : தமிழகக் கல்லூரிகளில் ரத்ததான கிளப்புகள்..ஆண்டுக்கு ரூ.4,000 நிதி - அரசு அதிரடி உத்தரவு!