
ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த விளக்கேத்தி அருகே புதுஅண்ணாமலை பாளையம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மகாசிவராத்திரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவில் ஏராளமான சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் ஈஸ்வரனை தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரியின் முக்கிய விழாவான மறுபூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் ஈஸ்வரன் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி காசு மற்றும் வெள்ளி மோதிரம் எலுமிச்சை பழம் ஆகியவை ஏலம் விடப்பட்டது.
2 ரூபாயில் ஆரம்பித்த ஏல தொகையை சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் போட்டி போட்டு விலையை உயர்த்தி கேட்டனர். ஆயிரங்களை தாண்டி சென்றது. இறுதியில் ஒரு எலுமிச்சம் பழத்தை அரச்சலூர் பகுதியை சேர்ந்த தங்கராசு என்பவர் கனி 13 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கினார்.
அதேபோல் வெள்ளி நாணயம் 35 ஆயிரம் ரூபாய்க்கும், சாமிக்கு அணிவித்திருந்த 5 கிராம் எடையுள்ள வெள்ளி மோதிரம் 41 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் ஏலம் போனது. இந்த எலுமிச்சை மற்றும் வெள்ளி காசுகளை வீட்டில் வைத்து பூஜித்தால் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக போட்டி போட்டு வாங்கி செல்வதாக பக்தர்கள் கூறினர். இந்த ஆண்டு ஏலத்தில் பெற்ற எலுமிச்சை மற்றும் வெள்ளி காசு, மோதிரத்திற்கான தொகையை அடுத்த ஆண்டு மகாசிவராத்திரியின் போது செலுத்தினால் போதும்.