
குப்பை பொறுக்கியவருக்கு திடீர் அதிர்ஷ்டம்
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் கொடுப்பார். பல மாவட்டங்கள், வெளிநாடுகளுக்கு சென்று மாரத்தான் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று காலை சென்னை கிண்டியில் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அந்த பகுதியில் தெருவோரத்தில் காகிதம் பொறுக்கி கடையில் போட்டு தனது அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது வாழ்வாதாரத்தை பார்த்து கொண்டு வந்துள்ளார்.
அந்த நபர் அமைச்சர் மா.சுப்பிரமணியனை பார்த்து பேசியுள்ளார். அப்போது அவரது நிலைமையை கேட்டறிந்துள்ளார். தனது ஊர் திருச்சி எனவும், பெயர் ராஜா என கூறியுள்ளார். தனக்கு யாரும் இல்லையென்றும் ஆதரவற்றவர் எனவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் உடல்நிலை பரிசோதனை
இதனையடுத்து அந்த நபரை அழைத்து சென்று குளிக்க வைத்து புத்தாடைகள் கொடுத்து உடுத்த வைத்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அந்த நபருக்கு உடல் நிலை தொடர்பாக மருத்துவமனையில் பரிசோதனை செய்த பிறகு அவரது வாழ்வாதாரத்திற்காக அரசு மருத்துவமனையில் மாதம் 12ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தற்காலிக வேலை வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள பதிவில், இன்று காலை நடைபயிற்சி முடித்து வந்துகொண்டிருந்த போது சாலை ஓரத்தில் பேப்பர் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை சேகரித்துக்கொண்டிருந்த ஒருவர் நம்மை அடையாளங்கண்டு வணக்கம் சொன்னார்.
12ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை
அவர் குறித்து விசாரித்ததில் திருச்சியை சார்ந்த ராஜா என்பதும்,அவர் தினந்தோறும் இப்பணியை செய்து அதில் கிடைக்கும் வருவாயில் அரைகுறையாக உண்டு சாலையோரங்களில் படுத்துறங்கும் ஆதரவற்ற தோழர் என்பதும் தெரியவந்தது. அவரை நமது தொழிலாளர் குடியிருப்பு இல்லத்தில் குளிக்க வைத்து மாற்று ஆடைகளை தந்து உடுத்தவும் வைத்து கலைஞர் நூற்றாண்டு உயற்சிறப்பு மருத்துவமனையில் அவரின் நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சைகளும், வாழ்வாதாரத்திற்கு தற்காலிக பணி ஒன்றும் வழங்க நடவடிகை எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.