முதுகலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு எப்போது? தேதியை அறிவித்தார் மா.சுப்பிரமணியன்!!

By Narendran SFirst Published Jan 19, 2022, 8:50 PM IST
Highlights

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டார். இதன்படி மாநில இடங்கள் 1,163 மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 1,053 இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவ மேற்படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எம்.டி., எம்.எஸ்.  போன்ற மேற்படிப்புகளுக்கான மொத்த இடங்கள் 2216. இதில், அகில இந்திய ஒதுக்கீடு 1053, மாநில ஒதுக்கீடு 1163 ஆகும். இதில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிவு 23 ஆம் தேதி வெளியிடப்படும்.

மாநில ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நாளை காலை முதல் கலந்தாய்வுக்கான முன்பதிவு தொடங்குகிறது. 1163 இடங்களுக்கான கலந்தாய்வு நாளையில் இருந்து முறையாக தொடங்கி வைக்கப்படுகிறது. இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் படிப்புகளில், அரசு மருத்துவ கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டில் 4349 இடங்கள், சுயநிதி கல்லூரிகளின் மூலம் கிடைக்கும் இடங்கள் 2650 என மொத்தம் 6999 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு படிப்படியாக நடைபெற உள்ளது. 24 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 29 ஆம் தேதி 15 சதவீதத்திற்கான அகில இந்திய ஒதுக்கீடு முடிவு வர உள்ளது. அதுவரை பொறுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே, 27 ஆம் தேதி கலந்தாய்வு நடைமுறை தொடங்குகிறது. மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் வாரிசுகளை உள்ளடக்கிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 27 ஆம் தேதி நடைபெறும். 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்கள் 436 உள்ளன. இதற்கான கலந்தாய்வு ஜனவரி 28 மற்றும் 29ல் நடக்கும். இந்த கலந்தாய்வு சமூக இடைவெளியை பின்பற்றி நேரடியாக நடத்தப்படும். அதன்பின்னர் 30 ஆம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலம் பொது கலந்தாய்வு தொடங்கி  நடைபெறும். பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு மற்றும் சுய நிதி கல்லூரிகளின் மூலம் அரசுக்கு நிர்வாக ரீதியாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ள இடங்கள் 1930. இந்த இடங்களுக்கும் ஜனவரி 30 ஆம் தேதியில் இருந்து கவுன்சிலிங் நடக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

click me!