
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டையில், பள்ளி முடிந்து தாத்தாவுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி மீது பால் வேன் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் தப்பியோடினார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள சொக்கநாதப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் ஷாலினி (4). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தாள்.
வழக்கம்போல நேற்று பள்ளிக்கு சென்ற ஷாலினியை, அவரது தாத்தா கோவிந்தன் மாலையில் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது தஞ்சாவூரில் இருந்து மதுரை நோக்கி அதிவேகத்தில் சென்ற பால் வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஷாலினி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஷாலினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அவரது தாத்தா கோவிந்தன் கதறி அழுதார். இதற்கிடையில் அந்த ஓட்டுநர் வேனை எடுத்துக் கொண்டு தப்பி விட்டார்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் ஆதனக்கோட்டை காவலாளர்களுக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பலத்த காய்மடைந்த ஷாலினியை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தாள்.
பின்னர் ஷாலினியின் உடல் உடற்கூராய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து ஆதனக்கோட்டை காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பால்வேனை புதுக்கோட்டை இச்சடியில் வைத்து மடக்கி பிடித்தனர்.
பின்னர் அதில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய பால் வேன் ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.
நான்கு வயது சிறுமி வேன் மோதி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.