
அதிமுகவில் இருந்து கொண்டே முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.-ன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுவதாக வட சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் செயலாளரும் எம்ஜிஆரின் பாதுகாவலராக இருந்தவருமான ஓம்பொடி பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ன் நூற்றாண்டு விழா அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசன், வெளி மாநில மக்களுக்கு எம்.ஜி.ஆரை தெரியாது என்று பேசினார்.
இதற்கு ஓம்பொடி பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர். மன்ற தோழர்களும், பக்தர்களும், கழக உறுப்பினர்களின் சார்பாகவும் கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.
திண்டுக்கல் சீனிவாசனை, அதிமுக தலைமைக் கழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மீறி அனுமதிக்கும்பட்சத்தில், தலைமைக்கழகம் முற்றுகையிடப்பட்டு பூட்டு போடப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு வாரகாலத்தில் திண்டுக்கல் சீனிவாசன் வகிக்கும் பதவியை பறிக்க வேண்டும் இல்லையென்றால் அவர் செல்லுமிடமெல்லாம் கருப்பு கொடி காட்டப்படும் என்றும் ஓம்பொடி பிரசாத் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.