தினகரனின் அறிவிப்பால் உதகையில் நடைபெறவிருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ரத்து; நிர்வாகிகள் அப்செட்…

Asianet News Tamil  
Published : Sep 01, 2017, 08:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
தினகரனின் அறிவிப்பால் உதகையில் நடைபெறவிருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ரத்து; நிர்வாகிகள் அப்செட்…

சுருக்கம்

MGR anniversary ceremony to be canceled by Dinakaran announcement

நீலகிரி

மாவட்டச் செயலாளர்களை தினகரன் நீக்கி அறிவித்ததால் உதகையில் நடைபெறவிருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. தற்போது நிகழ்ச்சியின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சொன்ன தேதியில் நடக்குமா என்பதும் சந்தேகமே!

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தமிழக அரசு விழாவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில், நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி இவ்விழா நடைபெறுமென அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன.

பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டதோடு, விழா நடைபெறும் இடமாக உதகையில் உள்ள குதிரைப் பந்தய மைதானமும் தேர்வு செய்யப்பட்டு அங்கு விழா பந்தலுக்கான கால்கோள் விழாவும் நடைபெற்றது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நீலகிரி மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சரான உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நீலகிரி மாவட்ட அதிமுக செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜுனன் ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் உதகையில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து எஸ்.பி.வேலுமணியும், கே.ஆர்.அர்ஜுனனும் டிடிவி தினகரனால் விடுவிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான தேதியும் மாற்றப்பட்டுள்ளது.  செப்டம்பர் 11-ஆம் தேதிக்குப் பதிலாக 27-ஆம் தேதி இவ்விழா நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட  ஆட்சியரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேபோல, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக சுற்றுலாத் துறையின் சார்பில் உதகையில் நடத்தப்பட்ட  படகுப் போட்டி,  மகளிர் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட கோலப்போட்டி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சத்துணவுத் திட்ட சமையலர்களுக்காக நடத்தப்பட்ட சமையல் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் பரிசளிப்பதாக இருந்ததும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவியருக்காக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் முதல்வர் பரிசளிப்பார் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர்.. திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது
மதுரை LIC அலுவலக தீ விபத்தில் திடீர் திருப்பம்.. பெண் மேலாளரை உயிரோடு எரித்து கொன்றது அம்பலம்!