ரயில் நிலையங்களில் இருசக்கர வாகனங்கள்..! கெடு விதித்த மெட்ரோ நிர்வாகம்

By Ajmal KhanFirst Published Sep 29, 2022, 1:48 PM IST
Highlights

மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களை எடுத்துச் செல்ல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாகனங்களை எடுத்துச் செல்லவில்லையென்றால், காவல் நிலையங்களில் ஒப்படைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்தை நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அலுவலகத்திற்கு செல்பவர்களுக்கு மெட்ரோ ரயில் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தை மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுத்தவும் அலுவலக பணி முடிந்து திரும்பச் செல்லும் பொழுது வாகனங்களில் எடுத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவன கட்டுப்பாட்டில் 41 மெட்ரோ இரயில் நிலையங்கள் உள்ளது. இந்த நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காலக்கட்டத்தில் இருந்து இதுநாள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து வகை வாகனங்களும் எடுத்துச் செல்லாமல் அதன் உரிமையாளர்கள் பல்வேறு காரணத்தால் விட்டு சென்றுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவர்களது வாகனங்களை எடுத்துச் செல்ல வாகனத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அதற்கான வாகன நிறுத்த கட்டணத்தை செலுத்தி வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை எடுத்துச் செல்லலாம்  என்று அறிவிப்பு  விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எடுத்துச் செல்லாத வாகனங்கள் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பெற்றுச்செல்ல ஒரு வாய்ப்பை மெட்ரோ இரயில் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் தங்களது வாகனங்களை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இன்று முதல் 28.10.2022-ம் தேதிக்குள் எடுத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தவறவிட்டால் வாகனங்கள் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

​​​

click me!