
டிசம்பர் 5-ம் தேதி முதல் மீனவர்கள் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நேற்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்:
டிசம்பர் 7 வரையிலான காலக்கட்டத்தில், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரும் என்பதால் டிசம்பர் 5 முதல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல்பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம்.
மழை வாய்ப்பு:
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப்பகுதியை பொறுத்தமட்டில், ஓரிரு முறை லேசான மழை பெய்யும் என பாலச்சந்திரன் தெரிவித்தார்.