Tamilnadu Rain : உருவாகிறது ”புயல்”..?- தழிழகத்திற்கு தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு...!

Published : Nov 29, 2021, 04:59 PM IST
Tamilnadu Rain : உருவாகிறது ”புயல்”..?- தழிழகத்திற்கு தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு...!

சுருக்கம்

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளதாகவும், அடுத்தடுத்த உருவாகும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமுதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நாளை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதனை தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் அது நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதாவது புயல் சின்னமாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்

இதன் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 5 தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என தெரிவித்தார். வடகடலோர மாவட்டங்கள், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். 

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், வருகிற 1-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வருகிற 2, 3-ந் தேதிகளில் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் கூறினார்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 17 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

இதற்கிடையே தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகும் நிலையில் நாளை மறுநாள் மத்திய கிழக்கு அரபிக்கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் அரபிக்கடல் பகுதியில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாவதால் தமிழகத்தில் மேலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

அதிகாலையில் சவுக்கு சங்கர் வீட்டிற்கு சுத்துபோட்ட போலீஸ்! மொத்த டீமும் கைது.? பின்னணி என்ன?
தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு! ரூ.48,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?