
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மெர்சல் திரைப்படத்தில் வரும் காட்சிகள் இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிராக உள்ளதாக அதில் கூறியுள்ளார்.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் தவறான புரிதலை ஏற்படுத்தும் என்றும், இந்த படத்துக்கு தணிக்கைக்குழு, தணிக்கைச் சான்று வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் மனுவில் அவர் கூறியிருந்தார்.
மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, டிஜிட்டல் இந்தியா குறித்து வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வசனங்கள், தவறான கருத்துக்களை பரப்பும் என்றும், நாட்டின் வரிவிதிப்பு முறையையும் தவறாக சித்தரிக்கும் வகையில் உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மெர்சல் திரைப்படத்துக்கு தரப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்பப்பெற கோரிய வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.