தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்...!

By Narendran SFirst Published Jun 10, 2022, 11:25 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பமணியன், கொரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் 22 இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு தொற்று இருந்தது. அவர்களையும், அவர்கள் தொடர்புடையவர்களையும் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். மராட்டியம் போன்ற மாநிலங்களில் முககவசம் அணிய வேண்டியது இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்ட பிறகு தற்போது முககவசம் அவசியம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை முககவசம் அணியவேண்டியது இல்லை என்ற அறிவிப்பை நாம் வெளியிடவில்லை. ஏனென்றால் பேரிடர் முடிகிறவரை நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். பொது நிகழ்ச்சிகளில் கூட முககவசம் அணிய வேண்டியதை கட்டாயமாக்கிக் கொண்டிருக்கிறோம். தடுப்பூசியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 42 லட்சத்து 87 ஆயிரத்து 346 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போட வேண்டியுள்ளது.

2வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் 2 கோடி பேர் இருந்த நிலையில் தற்போது 1 கோடியே 20 லட்சமாக குறைந்துள்ளது. மொத்தமாக 1 கோடியே 64 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடவேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் கையிருப்பில் 99 லட்சத்து 56 ஆயிரத்து 665 தடுப்பூசி உள்ளது. தினந்தோறும் 15 முதல் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டால், அனைவருக்கும் தடுப்பூசி போட தாமதமாகும் என்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மெகா தடுப்பூசி முகாம் கடந்த மாதம் ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு, 17.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அந்த வகையில் வரும் 12 ஆம் தேதி மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் தமிழகம் முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. பி.எ.4 மற்றும் பி.எ. 5 போன்ற உருமாற்ற வைரஸ் பாதிப்பு நமக்கு வரத்தொடங்கி இருக்கிறது. 150 மாதிரிகளில் 4 நபர்களுக்கு பி.எ.4ம், 8 நபர்களுக்கு பி.எ.5ம் என மொத்தம் 12 நபர்களுக்கு இருந்தது. மேலும் மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது.

அதன் விபரம் பின்னர் தெரியவரும். ஒமைக்ரானை பொறுத்தவரையில் 7 வகையிலான உருமாற்றங்கள் உள்ளது. ஆனால் அது பெரிய வகையில் உயிர் பாதிப்பை ஏற்படுத்துவதாக இல்லை என்றாலும் அது வேகமாக பரவும் தன்மையுடையது. எனவே நாம் கூடுதல் கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகளை விதித்து, செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். முன்னெச்சரிக்கையாக தனிமனித இடைவெளி கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். ‘பூஸ்டர்’ தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதை கடந்தவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் போடப்படுகிறது, மேலும் மெகா தடுப்பூசி முகாம்களிலும் போடப்படும். 18 வயது முதல் 59 வயது வரை உள்ள நபர்களுக்கு தனியார் மருத்துவமனைகளின் மூலம் ரூ.388க்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதையும் அரசு மருத்துவமனைகளில் போட மத்திய அரசை கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

click me!