
மருத்துவம், பொறியியல் தவிர பிற துறைகளையும் மாணவர்கள் தேர்ந்தெடுத்து தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட காவல் சூப்பிரண்டு சோனல்சந்திரா கூறினார்.
பெரம்பலூர் மாவட்ட காவல் துறை ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு, பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் குழந்தைகள் தினவிழா பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.
விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட காவல் சூப்பிரண்டு சோனல் சந்திரா தலைமை தாங்கினார். அப்போது பேசுகையில், “நாட்டில் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய 2 துறைகளையே விரும்பி தேர்வு செய்கின்றனர். இதைத்தவிர விளையாட்டு, அறிவியல், பயோடெக்னாலஜி என பலதரப்பட்ட துறையிலும் மாணவ, மாணவிகள் நுழைந்து அதில் தங்களது திறமைகளை நிரூபிக்க வேண்டும். ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் நன்கு திட்டமிட்டு செயல்பட்டால் குறிக்கோளை எளிதில் அடைந்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம்” என்று கூறினார்.
பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார், குற்றப்புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தம்பிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யோகா ஆசிரியை அமராவதி வரவேற்று பேசினார். மக்கள் நீதிமன்றத்தின் மூலம் வழக்குகளுக்கு எளிதில் தீர்வு காண்பது குறித்தும், சட்டப்பணிகள் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர் வெள்ளைசாமி பேசினார்.
குழந்தைகள் தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்டவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் முகம்மது உசேன்பாபு, ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் சப்–இன்ஸ்பெக்டர் மாலதி மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் அரசுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜ் நன்றி கூறினார்.