தொடரும் படுகொலைகள்! திராவிட மாடல் திமுக அரசின் அலங்கோலம்! லிஸ்ட் போட்டு அலறவிடும் நாராயணன் திருப்பதி!

By vinoth kumarFirst Published Jul 7, 2024, 7:26 AM IST
Highlights

போதை பொருட்கள், கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டிய அதே வேளையில், டாஸ்மாக் மது போதையும் இந்த கொலைகளுக்கு மிக முக்கிய காரணியாய் அமைகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழகத்தில் நிரந்தர மது விலக்கு ஒன்று தான் இதற்கான நிரந்தர தீர்வு. 

அமைதிப்  பூங்கா என்று சொல்லப்படுகிற தமிழகம் மெல்ல மெல்ல குற்ற செயல்களின் தலைநகரமாக மாறிக்கொண்டிருக்கிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திராவிட மாடல்  திமுக அரசின் அலங்கோலம் என கூறி தமிழகத்தில் நடந்த தொடர் கொலைகளை லிஸ்ட் போட்டுள்ளார். 

Latest Videos

1. 28/04/2024 - சென்னை, ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.

2. 29/02/2024 வண்டலூர் அருகே திமுக பிரமுகர் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து பெட்ரோல் குண்டுகளை வீசியது. அவர் தப்பிக்க முயன்றபோது, ​​அவரை துரத்திச் சென்று, கத்தியால் அவரது கை, கால்களை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

3. 23/05/ 2024, பூந்தமல்லியில் பரபரப்பு இந்து அமைப்பு மாநில தலைவர் வெட்டி படுகொலை: தப்பிய மர்ம நபருக்கு வலை.

4. 30/06/2024, சிவகங்கையில் 4 இரு சக்கர வாகனங்களில் வந்த 8 பேர் வெட்டியதில் இருவர் படுகொலை.

5. 15/02/2024, மதுரை வண்டியூரில் அடையாளம் தெரியாத கும்பலால் ஒருவர் வெட்டி படுகொலை.

6. 02/05/2024, நெல்லை காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் தன்சிங் படுகொலை செய்யப்பட்டு கண்டுபிடிப்பு.

7. 03/07.2024, சேலத்தில் அ தி மு க பிரமுகர் கூலிப்படையினரால் வெட்டி படுகொலை.

8.02/07/2024, வேலூரில், ரவுடி ராஜா என்கிற நபரை ஆறு பேர் கும்பகல் ஒன்று கொடூரமாக வெட்டிக் கொன்றது.

9. 20/05/2024, திருநெல்வேலி - நெல்லையில் பட்டப்பகலில் தீபக் ராஜா  இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை.

10. 10/06/2024, கமுதி அருகே பாப்பாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணன் (51) மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

11. 30/06/2024, கடலூரில் அதிமுக நிர்வாகி மோட்டார் சைக்கிளில் சென்ற கும்பலால் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை - குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு.

12. கோவில்பட்டி - மீன் வியாபாரி உட்பட இருவர் வெட்டிபடுகொலை.

13. 29/04/2024 - தஞ்சாவூர் - இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களால் காய்கறி வியாபாரி வெட்டிபடுகொலை. 

14. 03/07/2024, திருச்சி - நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு - இளைஞர் வெட்டிப் படுகொலை; இருவர் கைது.

15. 27/04/2024 - மதுரை - மாட்டுத்தாவணியில், பட்ட பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை- தனது தம்பியின் கொலைக்கு பழிக்குப்பழி!

16. 12/04/2024 - தூத்துக்குடி - இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேருக்கு மேற்பட்ட கும்பல் செந்தில் ஆறுமுகம் என்பவரை சராமரியாக ஓட விட்டு விரட்டி வெட்டிக் கொலை.

17. 12/06/2024, சென்னை, திருவான்மியூர் - வழக்கறிஞர் வெட்டி படுகொலை. 

18. 22/05/2024, திண்டுக்கல் - யாகப்பன்பட்டி டாஸ்மாக் கடை அருகே திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த மாயாண்டி ஜோசப்(60) என்பவரை நேற்று இரவு மர்ம நபர்கள் வெட்டி படுகொலை.

19. 30/03/2024, - மதுரையில் பயங்கரம்! மரத்தை வெட்டியதை தட்டி கேட்ட ரைஸ்மில் அதிபர் வெட்டிப் படுகொலை!

20. 29/04/2024 - திருநெல்வேலி, மதுபோதையில் நண்பரை வெட்டிப் படுகொலை செய்த இருவர் கைது.

21. 09/05/2024, தூத்துக்குடி - ஓசிக்கு மது பாட்டில் தர மறுப்பு, பார் ஊழியர் வெட்டிக் கொலை. 

22. 05/07/2024, நேற்று பி எஸ் பி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். 

இவை ஒரு உதராணத்திற்கு தான். இது போன்ற நூற்றுக்கணக்கான படுகொலைகள் இந்த வருடத்தில் மட்டுமே நடைபெற்றுள்ளன. இவை அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்பு இல்லாதவை என்றாலும், இந்த கொலைகளில் பல ஒற்றுமைகள் உள்ளன.

1. பெரும்பாலான கொலைகளில் ஈடுபட்டவர்கள் 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள்.

2. கொலைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் நடந்தவை.

3. கொலையாளிகள் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தினர்.

4. பெரும்பாலானோர் மது போதையிலோ அல்லது போதை பொருட்களின் ஆதிக்கத்திலோ தான் இந்த கொலைகளை செய்துள்ளனர்.

5. பெரும்பாலானோர் கூலிப்படைகளாகத்தான் செயல்பட்டுள்ளனர். அதாவது பணத்திற்காக கொலை செய்யும் கும்பல்கள்.

6. பழிவாங்குதல், பண விவகாரம், நில விவகாரம் போன்றவை தான் பெரும்பாலான படுகொலைகளுக்கு காரணம்.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, சுலபமாக பணம் சம்பாதிக்க, குறுக்கு வழியில், விரைவில் பணமீட்ட இந்த கொலைகள் நடைபெறுவது தெளிவாகிறது. அமைதிப்  பூங்கா என்று சொல்லப்படுகிற தமிழகம் மெல்ல மெல்ல குற்ற செயல்களின் தலைநகரமாக மாறிக்கொண்டிருக்கிறது. உழைத்து, தொழில் செய்து பொருளீட்டுபவர்களை விட குறுக்கு வழியில் சம்பாதிப்பவர்கள் தான் குற்ற செயல்களுக்கு காரணம் என்பது உண்மை.

மேலும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அல்லது தூண்டி விடுபவர்கள் அரசியல் பின்புலம் உள்ளவர்களாக இருப்பதும், காவல் துறையை சேர்ந்த சிலரின்   ஒத்துழைப்பு மற்றும் ஆசி இருப்பதும் மறுக்க முடியாத உண்மை. கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், ஆள் கடத்தல், கள்ள சாராயம், போதை பொருள் விநியோகம், டாஸ்மாக் பார், சூதாட்டம் என சட்ட விரோத நடவடிக்கைகள் கொடி கட்டிப் பறப்பதால், இதில் ஈடுபட்டுள்ளவர்கள், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு, அரசியல்  நிகழ்வுகளுக்கு அந்தந்த பகுதியில் செலவு செய்து அரசியல்வாதி என்கிற போர்வைக்குள் பதுங்கி புகலிடம் தேடி தங்களின் சட்ட விரோத செயல்பாடுகளை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். நேரடியாக தொடர்பில்லா விட்டாலும்,  இந்த நபர்களுக்கு பின்னால் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள்/ பிரமுகர்கள்  பக்கபலமாக உள்ளார்கள். அந்த அரசியல் கட்சி நிர்வாகிகள்/பிரமுகர்கள் தங்களுக்கு காவல்துறையில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி பொன் முட்டையிடும் வாத்தாக உள்ள சட்ட விரோத செயல்பாட்டில் ஈடுபடும் சமூக விரோத தீய சக்திகளுக்கு கேடயமாக உள்ளார்கள். 

இவை மாற வேண்டுமெனில் ஒட்டுமொத்த சமுதாய அமைப்பும் மாற வேண்டும். அரசு  நிர்வாகம் புது பொலிவு பெற வேண்டும். காவல் துறை நிர்வாகம் மாற்றியமைக்கப்பட வேண்டும். காவல்துறை நிர்வாகத்தில் அரசியல் தலையீடு முற்றிலும் அகற்றப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனைகள் உடனே வழங்கப்பட வேண்டும். 

போதை பொருட்கள், கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டிய அதே வேளையில், டாஸ்மாக் மது போதையும் இந்த கொலைகளுக்கு மிக முக்கிய காரணியாய் அமைகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழகத்தில் நிரந்தர மது விலக்கு ஒன்று தான் இதற்கான நிரந்தர தீர்வு. அது சாத்தியமில்லையெனில், தமிழகம் அமைதியாக இருப்பது  சாத்தியமில்லை.  முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள், லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரசியல் தலையீடுகள் ஆகிய இவைகள் தான் திராவிட மாடல். இந்த திராவிட மாடல் தான் தற்போதைய தமிழகத்தின் தலையெழுத்து. இது மாற வேண்டும், இல்லையேல் தமிழகம் கொலைகாரர்களின் ராஜ்ஜியமாகி விடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

click me!