
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் மே தின விழாவை பல்வேறு அமைப்புகள் பேரணி நடத்திக் கொண்டாடின.
கிருஷ்ணகிரி மாவட்டம், பழையபேட்டை ஆட்டோ நிலையம், புதுப்பேட்டை ஆட்டோ நிலையம், அரசு போக்குவரத்துக் கழக புறநகர் மற்றும் நகர் கிளை பணிமனைகள், புதுப்பேட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சி.ஐ.டி.யு, இந்தியக் கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகியவற்றின் சார்பில் மே தினவிழா கொண்டாடப்பட்டது.
அதேபோன்று, கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்த மே தின விழாவிற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கி சுமைதூக்குவோர் நல சங்க பெயர் பலகையை திறந்து வைத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுபுத்தகங்கள், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில், கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக வளாகத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில இளைஞரணிச் செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார். இந்த விழாவில் பங்கேற்றவர்களுக்கு தென்னங்கன்றுகளையும் வழங்கினார். நூலகர் ரமேஷ் வரவேற்றார். மாநில இணை செயலாளர் நந்தகுமார், உழைப்பாளர் தினம் குறித்து பேசினார்.
இதில், பொருளாளர் கிருஷ்ணன், இணை செயலாளர் வெங்கடாசலபதி, செந்தில், ரவிக்குமார், சுரேஷ், பாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் சங்கத்தின் கொடியை ஏற்றி, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவின் இறுதியில் நேரு நன்றித் தெரிவித்தார்.