
திண்டுக்கல்
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டி திண்டுகல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் மதுரை சாலையில் காளியம்மன் கோயில் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு, கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் டி.காசிமாயன் தலைமை தாங்கினார். கிளைச் செயலர் கே. ரத்தினகிரி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கே. கருப்புசாமி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் மற்றும் வத்தலகுண்டு பேரூராட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்தும் பேசினர்.
அதனைத் தொடர்ந்து, “வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கிட வேண்டும்,
குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்,
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்,
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்,
நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தப்பட்டது.
மேலும், வத்தலகுண்டு பேருந்து நிலையம் மற்றும் காளியம்மன் கோயில் பகுதிகளில் இலவச கழிப்பறை கட்டுவது உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வத்தலகுண்டு பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.