தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுமளவிற்கு இடி மின்னலுடன் கனமழை…

First Published May 25, 2017, 9:48 AM IST
Highlights
Heavy rains flooded on the streets with thunderous lightning ...


திண்டுக்கல்

கொடைக்கானலில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மரம் சாய்ந்து விழுந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பின்னர், காலையில் இருந்தே மழை பெய்து வந்தது. இந்த நிலையில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால் சாலை, தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சாக்கடை நீருடன், மழைநீர் கலந்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. பகல் நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி பயணம் மேற்கொண்டன.

இந்த கனமழை காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும், நட்சத்திர ஏரிக்கும் நீர் வரத்து தொடங்கியுள்ளது. மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் கொட்டியது.

கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலை பெருமாள் மலை பகுதியில் மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இருபுறங்களில் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவலறிந்ததும் நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மக்களின் உதவியுடன் சாலையில் சாய்ந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய பின்னரே போக்குவரத்து சீரானது.

இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

click me!