
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டுக்காக தமிழக மாணவர்கள் சென்னை மெரினாவில் நிகழ்த்திய புரட்சியை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தமிழகத்தை கண்டு கொள்ளாத ஒட்டுமொத்த வட இந்திய ஊடகங்களும் தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வந்த போராட்டத்தை முதன்மைச் செய்தியாக வெளியிட்டன.
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த அந்த அறவழி அகிம்சை போராட்டம் தற்போது ஹைட்டோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மெரினா கடற்கரையில் மீண்டும் வெடித்துள்ளது.
விவசாயிகளுக்காக ஒன்றிணையுங்கள் மாணவச் சொந்தங்களே என்ற இணையப் பிரச்சாரத்தின் அடிப்படையில் மெரினா கடற்கரை இன்று காலை முதலே பரபரப்புடன் காணப்பட்டது.
மாணவர்கள் கூடுவதை தடுக்க அண்ணாசதுக்கம் சாலையில் அதிவிரைவு மற்றும் ஆயுதப் படை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனை மீறியும் கடற்கரைப் பகுதியில் 11 மாணவர்கள் கடற்கரைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
தகவலறிந்த போலீசார் அவர்களை மாணவர்களை முற்றுகையிட முயன்றபோது இளைஞர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் மெரினாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் 11 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை மெரினாவைப் போல திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.