
சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் காரை முந்திசெல்வதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு துப்பாக்கிகளை காட்டிமிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். அவர் வைத்திருந்தது பொம்மை துப்பாக் கி என தெரியவந்தது.
சென்னை அண்ணா நகர் கிழக்கு விரிவாக்கப்பகுதியை சேர்ந்தவர் சச்சின்(37)இதே பகுதியை சேர்ந்தவர் நரேஷ்(36). இவர் நேற்று காரில் வந்த போது சச்சின் வந்த காரும் நரேஷ் வந்த காரும் முந்தி செல்வதில் போட்டி ஏற்பட்டுள்ளது.
அப்போது வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நரேஷ் திடீரென தன்னிடமிருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார், ஒன்றுக்கு இரண்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இதை பார்த்து பயந்து போன சச்சின் இது குறித்து திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனால் பரபரப்படைந்த போலீசார் உடனடியாக நரேஷ் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். அவரிடமிருந்த துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணை நடத்தியதில் அவரிடமிருப்பது ஏர் பிஸ்டல் என தெரியவந்தது.
அவருக்கு சமீப காலமாக தொழில் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட நரேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளார். அதன் விளைவே கோபப்பட்டு துப்பாக்கியை எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.
நரேஷை கைது செய்த போலீசார் அவர்மீது 341,323,506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.