
மணமேடையில், அண்ணனை கீழே தள்ளி விட்டு மணப்பெண்ணுக்கு தம்பி தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த செல்லரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவருக்கு ரஞ்சித், ராஜேஷ், வினோத் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
இதில், ராஜேஷ், வினோத் ஆகியோர், திருப்பத்தூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் விருதுநகரை சேர்ந்த மாலா என்ற பெண்ணுக்கும், ராஜேஷூக்கும் திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று திருப்பத்தூர் அடுத்த வெண்கல்குன்றம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில், திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து பெண் வீட்டார் நேற்று காலை பத்து மணிக்கு வெண்கல்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்தனர். முகூர்த்த நேரம் தொடங்கியதையடுத்து ஐயர் ராஜேஷிடம் தாலியை எடுத்து கொடுத்தார். அதை ராஜேஷ் வாங்கி தாலி கட்ட முயன்றபோது, தம்பி வினோத், திடீரென அண்ணன் ராஜேசை தள்ளி விட்டு தன் பாக்கெட்டில் வைத்திருந்த மற்றொரு தாலியை எடுத்து, மாலாவுக்கு கட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் உறவினர்கள் வினோத்தை சரமாரியாக தாக்கினர்.
மணப்பெண்ணின் உறவினர்கள் தாலியை கழற்றி எரிந்து விட்டு வேறு தாலியை கட்டும்படி ராஜேசிடம் கூறினர். ஆனால் ராஜேஷ் அதற்கு மறுப்பு தெரிவித்து அழுதுகொண்டே சென்றார்.
இதனால் மணப்பெண்ணின் உறவினர்கள், ஊர் பஞ்சாயத்தை கூட்டினர். அதில், வினோத் கூரும்போது படித்தால் மட்டும் போதுமா என்ற சினிமாவில் வருவது போல, அண்ணனுக்கு பெண் பார்க்க, விருதுநகருக்கு சென்ற போது மாலாவை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இதனால் மாலாவை திருமணம் செய்து கொள்வது குறித்து, மாலாவிடமே போனில் கூறினேன்.
முதலில் மறுத்த மாலா, பின் சம்மதித்தார். நாங்கள் போட்ட திட்டப்படிதான் மாலாவுக்கு நான் தாலி கட்டினேன் என தெரிவித்தார்.
மாலா கூறுகையில், எனக்கு வினோத் பிடித்துள்ளதால், இந்த திட்டத்திற்கு சம்மதித்தேன் என தெரிவித்தார். பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ள மறுத்து மாலாவுக்கு கட்டிய தாலியை கழற்றி, பஞ்சாயத்தாரிடம் கொடுத்து விட்டு சென்றனர்.