
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் லாரி மோதி மொபட் சென்ற சாலை பணியாளர் இறந்ததையடுத்து லாரி ஓட்டுநர் அலறியடித்து ஓடிப்போய் போலீஸிடம் சரணடைந்தார். ஆனால், ஓட்டுநர் சம்பவ இடத்துக்கு வர வேண்டும் என்று கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள சித்தூரை சேர்ந்தவர் சின்னையா (42). இவர் நெடுஞ்சாலைத்துறையில் சாலைப் பணியாளராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று ஆத்தங்காடு பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சக பணியாளர்களுக்கு சாப்பாடு வாங்குவதற்காக மொபட்டில் சென்றார். புதுக்கோட்டை சாலையில் உள்ள அரசங்குடிக்கு சென்றுவிட்டு சாப்பாடு வாங்கிக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
நெறிஞ்சிக்குடி விளக்கு பகுதி அருகே அவர் வந்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக கிரஷர் மண் ஏற்றி சென்ற லாரி, மொபட் மீது அதிவேகமாக மோதியது. இதில், சாலையோர பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட சின்னையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உடனே, லாரி ஓட்டுநர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, காரையூர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சித்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நெறிஞ்சிக்குடி விளக்கு பகுதியில் அதிகளவு விபத்து ஏற்படுகிறது. தற்போது நடைபெற்ற விபத்திற்கு காரணமான லாரியின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை - பொன்னமராவதி சாலையில் நெறிஞ்சிக்குடி விளக்கில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் கோபாலசந்திரன், அன்னவாசல் ஆய்வாளர் மங்கையக்கரசி, காரையூர் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து காவலாளர்கள் சின்னையாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் காரையூர் காவலாளார்கள் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் குமரன் (47) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.