தேசப்பிதா மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

By SG Balan  |  First Published Jan 27, 2024, 7:24 PM IST

மகாத்மா காந்தியின் போதனைகள் தன் வாழ்வின் வழிகாட்டியாக விளங்கியதாவும் அவரை தான் அவமதிக்கவில்லை என்றும் சொல்லி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் கொடுக்கிறார்.


மகாத்மா காந்தியை தான் அவமதிக்கவில்லை என்றும் காந்தியின் போதனைகள் தனது லட்சியங்களாக இருந்தன என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருக்கிறார்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி. 1942ஆம் ஆண்டுக்குப் பிறகு சுதந்தரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் தாக்கம் இல்லை என்று கூறி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்களிப்புதான் முக்கியமானது என்றும் கூறியிருந்தார். இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு ஆளுநர் ரவி விளக்கம் கொடுத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இதுகுறித்து ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசப்பிதா மகாத்மா காந்தியை நான் அவமரியாதை செய்தேன் என்று கடந்த 3-4 நாட்களில் சில ஊடகங்கள் தவறான எண்ணத்தை உருவாக்க முயல்கின்றன. அது உண்மை அல்ல. நான் மகாத்மா காந்தியை மிகவும் மதிக்கிறேன். அவருடைய போதனைகள் என் வாழ்க்கையின் லட்சியங்களாக இருந்தன" என்று தெரிவித்துள்ளார்.

"ஜனவரி 23, 2024 அன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாளில் நான் பேசியதைத் தொடர்ந்து, சில ஊடகங்கள் என் பேச்சை திரித்துவிட்டன. நமது தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை எனது உரையில் விரிவாகக் கூற முயன்றேன். 1947ஆம் ஆண்டு சுதந்திரத்தின் வேகத்தையும் செயல்முறையையும் துரிதப்படுத்தியது. பிப்ரவரி 1946 இல் ராயல் இந்தியன் கடற்படை மற்றும் விமானப்படையின் கிளர்ச்சிகள் - இரண்டும் நேதாஜியால் ஈர்க்கப்பட்டவை என்ற கருத்தை முன்வைத்தேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Raj Bhavan Press Release No: 7 pic.twitter.com/txTFt9JOWY

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn)

"இந்தக் கிளர்ச்சிகள் காரணமாக பிரிட்டிஷார் பீதியடைந்தனர். அவர்கள் இந்தியாவில் தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்கு சீருடையில் உள்ள இந்தியர்களை இனி நம்ப முடியாது என எண்ணினர். பிப்ரவரி 1946 இல் கிளர்ச்சிகள் நடந்தன. அடுத்த மாதம் மார்ச் 1946 இல், ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதாகப் பகிரங்கமாக அறிவித்தனர். கிளர்ச்சிகளைத் தடுக்க அரசியலமைப்பு சபையை அமைத்தனர்" என்றும் கூறியிருக்கிறார்.

"கடற்படை மற்றும் விமானப்படை கிளர்ச்சிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய தேசிய இராணுவத்தின் போர் உட்பட நேதாஜியின் புரட்சிகர நடவடிக்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டன. ஆகஸ்ட், 1942 இல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஆரம்ப வெற்றிக்குப் பிறகு, அதன் உத்வேகத்தை இழந்தது. ஆங்கிலேயர்கள் இன்னும் சில ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்திருக்கலாம். ஆனால், நேதாஜியின் ஆயுதப் புரட்சி அதை முறியடித்தது. நான் கூறியது முதன்மை ஆவணங்களின் அடிப்படையிலான உண்மைகள்" என்று ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் போதனைகள் தன் வாழ்வின் வழிகாட்டியாக விளங்கியதாவும் அவரை தான் அவமதிக்கவில்லை என்றும் சொல்லி ஆளுநர் தனது அறிக்கையை முடித்திருக்கிறார்.

click me!