தடையை மீறி ஜல்லிக்கட்டு – மதுரையில் தொடரும் ஆர்ப்பாட்டம்

First Published Nov 28, 2016, 10:36 AM IST
Highlights


ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி வாடிப்பட்டியில் சாலைமறியல், அவனியாபுரத்தில் தர்ணா போராட்டங்கள் நடந்தன. அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த அமைச்சர், மாற்று பாதையில் ஓட்டம் பிடித்தார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதையொட்டி மதுரை அருகேயுள்ள அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 100க்கு மேற்பட்ட வாலிபர்கள் நேற்று காலை 10.30 மணியளவில் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவில் திரண்டனர்.

அப்போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, சாலை மறியலால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில் அமைச்சரின் காரும் சிக்கியது. சுதாரித்துக் கொண்ட அமைச்சர் மாற்றுவழியில் மின்னல் வேகத்தில் காரில் பறந்தார்.

ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி பதாகைகளை ஏந்தியபடி வாலிபர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மதுரை - திண்டுக்கல் 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வாடிப்பட்டி போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். 

இதேபோல், ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மதுரை, அவனியாபுரம் பஸ் நிலையத்தில் நேற்று தர்ணா  நடந்தது.

இதற்கிடையில், மேலூர் அருகே கோட்டைபட்டி முனியாண்டி கோயில் முன் தடையை மீறி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட 10க்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இவற்றை வீரர்கள் ஆர்வத்துடன் விரட்டி பிடித்தனர். தகவலறிந்து கொட்டாம்பட்டி போலீசார்  அங்கு சென்றன. அதற்குள் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வீரர்கள் தப்பிச் சென்றனர்.

click me!