பாலியல் வன்கொடுமை.. நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி..

By Thanalakshmi V  |  First Published Dec 24, 2021, 4:25 PM IST

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கையை தொடர வேண்டாம் என்றாலும் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது.
 


ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவருக்கு, வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அதற்கான சிசிடிவி ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மனுவில் "கமுதி மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் பெண் ஊழியர் ஒருவருக்கு கமுதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமி கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பாக கமுதி போலிசில் புகார் அளித்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டு இருந்தது. 

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த செய்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இது தொடர்பாக ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமி அளித்த பாலியல் தொல்லையால், தன்னை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் கேட்டுக் கொண்டதால், அவரது கோரிக்கை ஏற்பட்டு, வேறு நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என தெரியவந்தது. இருப்பினும் தான் வேறு நீதிமன்றத்துக்கு சென்று விட்டதால் முனியசாமி மீதான நடவடிக்கையை தொடர வேண்டாம் பெண் ஊழியர் கேட்டுக்கொண்டதால், பாலியல் தொந்தரவு குறித்த புகார் முடித்து வைக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

Tap to resize

Latest Videos

இதையடுத்து நீதிபதி,"மனுதாரர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தீவிரமானது. நீதிமன்ற பெண் ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பானது. பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கையை தொடர வேண்டாம் என்றாலும் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. நீதிமன்றத்தில் பணி நேரத்தில் பெண் ஊழியரிடம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் போதையில் தவறாக நடக்க முயன்றுள்ளார். சிசிடிவி காட்சியில் நீதிமன்ற பெண் ஊழியரை முனியசாமி கையை பிடித்து இழுப்பது பதிவாகியுள்ளன.
 
இது இந்திய தண்டனை சட்டம் ,பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். எனவே மனுதாரரின் புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கறிஞர் முனியசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி, தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைக்க வேண்டும். சம்பவம் தொடர்பாக சிசிடிவி பதிவுகளை பார் கவுன்சில் மற்றும் போலீஸாருக்கு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

click me!