சத்குருவிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனுதாரர் தனிநபரைக் குறிவைத்து வழக்கு தொடர்ந்ததாகவும், இது பொதுநல வழக்கு அல்ல என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஈஷா அறக்கட்டளை இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது.
சத்குருவிற்கு எதிரான வழக்கு
சத்குருவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றினை தள்ளுபடி செய்து, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (07/11/2024) உத்தரவிட்டது. மேலும் மனுதாரர் “ஒரு தனிநபரைத் தெளிவாகக் குறிவைத்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளார், இது மக்களின் பொது நலனுக்காக தாக்கல் செய்யப்பட மனு இல்லை” என்று கூறி மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.
சமீபத்தில் மாண்புமிகு உச்சநீதிமன்றம், ஈஷாவுக்கு எதிராக தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தது. குறிப்பாக அந்த வழக்கில், மனுதாரர் “ஒரு அமைப்பை இழிவுபடுத்துவதற்காக இது போன்ற மனுக்களை பயன்படுத்த கூடாது” என்று அழுத்தமாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது சத்குருவிற்கு எதிராக தொடரப்பட்ட மற்றொரு வழக்கினை மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்து, மனுதாரரின் நோக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளது.
பத்மவிபூஷன் விருதுக்கு எதிர்ப்பு
சத்குரு அவர்களுக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது மக்களின் பொது நலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட மனு இல்லை, சத்குரு எனும் தனிநபரைக் குறி வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பினை ஈஷா அறக்கட்டளை வரவேற்கிறது.
முன்னதாக இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், கடந்த பல ஆண்டுகளாக சத்குரு அவர்கள் செய்து வரும் அனைத்து நல்ல பணிகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் சத்குருவை பத்ம விபூஷன் விருதிற்கு பரிந்துரைக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளதாகவும், சத்குருவுக்கு எதிராக எந்த எதிர்மறையான விஷயங்களும் இல்லை என்றும் கூறினார்.
இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்த அமைப்பு, இதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஈஷாவிற்கு எதிராக வேறொரு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்தது. அந்த வழக்கை “உள்நோக்கத்துடன் தொடரப்பட்டு வழக்கு” எனக் கூறி அப்போது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது நினைவுக்கூற தக்கது.
அவதூறு பரப்பும் குழுக்கள்
ஈஷாவின் நற்பெயருக்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் இடையூறு மற்றும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஒரு குழுவாக சிலர் செயல்பட்டு, ஈஷா குறித்து அவதூறுகளை பரப்பியும், பொதுநல மனு என்ற பெயரில் வழக்குகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
அவ்வாறு அவதூறு குற்றச்சாட்டுகளோடு உள்நோக்கத்துடன் ஈஷாவுக்கு எதிராக தொடரப்பட்ட பல வழக்குகளை, உண்மையின் பக்கம் நின்று தள்ளுபடி செய்து நியாயமான தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.