தேசிய மலராக உள்ள தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது
தேசிய கட்சியான பாஜக தற்போது மத்தியில் ஆளும் கட்சியாகவும் உள்ளது. இக்கட்சிக்கு தேர்தல் ஆனையம் தாமரை சின்னம் ஒதுக்கியுள்ளது. இந்தநிலையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான ரமேஷ் என்பவர், தேசிய மலரான தாமரையை பாஜக பயன்படுத்துவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “தேசிய மலரான தாமரையை ஓர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி. அது நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது ஆகும். எனவே, பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். ஆனால், எனது மனு மீது இதுவரை இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆணையத்தின் இந்தச் செயல், இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே, இந்த மனுவை பரிசீலித்து, பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்.” என கோரப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின் போது, தேசிய மலரான தாமரையை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கியதில் விதிமீறல் உள்ளதா? தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்க எந்த சட்டப்பிரிவு தடை செய்கிறது? என சென்னை உயர் நீதிமன்றம் மனுதாரருக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தது.
தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்ப மனு!
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தேசிய மலராக உள்ள தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.