
எஸ்.ஆர்.எம்.குழும தலைவர் வேந்தருக்கு நெருக்கமான மதன் கடந்த மே மாதம் 29ஆம் தேதி, காசியில் சமாதி அடையப் போகிறேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானர். அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியாமல் போனது. கடந்த 6 மாதமாக அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
மதன் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சீட்டு வாங்கித்தருவதாக் கூறி நூற்றுக்கணக்கான பெற்றோரிடம் ரூ.84 கோடி வரை பணம் பெற்றதாக புகார் எழுந்ததது. இதையொட்டி பச்சைமுத்து வேந்தரை போலீசார் கைது செய்தனர்.
மதனை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் மயமான வேந்தர் மூவீஸ் மதனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தக்கோரி, அவரது தாயார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் மருத்துவ இடம் வாங்கித் தருவதாகக் கூறி மதன் கோடிக்கணக்கில் மோசடி செய்தது குறித்தும் பாதிக்கப்பட்ட பெற்றோர் தனியாக மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை முதன்முதலாக விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாக முத்து, வி.பாரதிதாசன் ஆகி யோர் அடங்கிய அமர்வு, மதனை கண்டுபிடிக்கவும், பண மோசடி குறித்து விசாரிக்கவும் சிறப்பு போலீஸ் அதிகாரியாக கூடுதல் துணை ஆணையர் ராதா கிருஷ்ணனை நியமித்திருந்தது. குறித்த காலத்திற்குள் கண்டுபிடித்து ஆஜர்படுத்தும் படி கெடுவும் விதித்திருந்தது.
பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அக்டோபர் 6-ம் தேதிக்குள் மதனைக் கைது செய்து ஆஜர்படுத்தவில்லை என்றால் சென்னை போலீஸ் ஆணையர் மீது தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அரசு தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர், போலீசார் மதனை இன்னும் 4 வாரத்தில் கண்டுபிடித்து விடுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்னும் 4 வாரங்களில் மதனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 29/ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் மதனை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். தனிப்படையினர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அபிராமபுரத்தஒஇ சேர்ந்த சேகர் என்பவனை கைது செய்தனர்.
அதன் பின்னர்தான் மதன் வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. சேகருடன் மதன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தது தெரியவந்தது. நூற்றுக்கணக்கான சிம் கார்டுகளை மாற்றி மாற்றி மதன் சேகருடன் பேசி வந்தது தெரியவந்தது. மதன் இரண்டு கார்கள் வைத்திருந்ததாகவும் இரண்டு கார்களிலும் டெல்லி , உத்தரகாண்ட் , மணிப்பூர் , சிம்லா, கோவா, கர்நாடகா என மாற்றி மாற்றி சுற்றி வந்தது தெரிய வந்தது.
தற்போது மணிப்பூரில் மதன் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படை போலீசார் மணிப்பூர் விரைந்தனர். ஆனால் மதன் அதற்குள் திருப்பூருக்கு வந்துவிட்டதாக தகவல் கிடைத்ததன் பேரில் திருப்பூருக்கு விரைந்த தனிப்படை போலீசார் திருப்பூரில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மதனுடன் வர்ஷா என்ற பெண் இருந்தார். இவருடன் தான் சமீப காலமாக மதன் இருந்துள்ளார். மதனுக்கும் வர்ஷாவுக்கும் ஆண்டுக்கணக்கில் தொடர்பு இருந்துள்ளது. வர்ஷா கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்.
மதனை கைது செய்த போலீசார் வர்ஷாவை கைது செய்யவில்லை. ஆனால் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மதனிடம் தற்போது பணம் எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது. அவர் வடமாநிலங்களில் கோடிக்கணக்கில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக கூறப்படுகிறது.
உத்தரக்காண்டில் உள்ள ஊர்கி என்ற இடத்தில் பல ஏக்கரில் பண்ணை வீடு வாங்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மதனை எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். பின்னர் சைதாப்பேட்டையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவரை 15 நாள் போலீஸ் காவலில் அடைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டதை அடுத்து புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.