
விவசாயிகள் பிரச்சனைக்காக திமுக அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் 25 ஆம் தேதி 55 ஆயிரம் லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிர்க்கடன் தள்ளுபடி, காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் விவசாயிகள் கடந்தஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாம்புக் கறி உண்ணுதலில் ஆரம்பித்த போராட்டம் இன்று சிறுநீர் அருந்தும் வரை சென்றுள்ளது.
போராட்டக் களத்தில் விவசாயிகளோடு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அமர்ந்து ஆதரவு தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் இதை தமிழக அமைச்சர்கள் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா?. விவசாயிகளுக்காக மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டிய தமிழக அரசோ விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று கூறுவது என்ன மாதிரியான டிசைன்.
இதையெல்லாம் உன்னிப்பாக கவனித்த திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 16 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார்.
இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு தேசிய மக்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. அப்போது விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் 25 ஆம் தேதி முழு கடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இந்த பொதுவேலை நிறுத்தம் பயன்தராது என்று ஒரு சில கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், திமுகவுக்கு அழைப்பு விடுத்த இப்போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.
25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கபேரமைப்பு நேற்று தெரிவித்ததிருந்தது.
இந்தச் சூழலில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிற 25-ம் தேதியன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 55,000 மணல் லாரிகள் ஓடாது என்று தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.