பாம்பன் பாலம் போல நீண்ட வரிசையில் மக்கள்…

 
Published : Nov 12, 2016, 02:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
பாம்பன் பாலம் போல நீண்ட வரிசையில் மக்கள்…

சுருக்கம்

வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகளை வாங்க பாம்பன் பாலம் போல நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

500, 1,000 ரூபாய் நோட்டுகள் கடந்த 8–ந்தேதி நள்ளிரவு முதல் செல்லாது என்றும், கையில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30–ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் வியாழக்கிழமை முதல் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை நாளொன்றுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் மாற்றிக் கொள்ளலாம் எனவும், வங்கிகளில் கணக்குகளில் வைப்பு தொகையாக செலுத்தி கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பால் மக்கள் பெரும் பாடைந்தனர்.

திருச்சியில் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு மாற்று ரூபாய் நோட்டுகள் வழங்குவதற்காக ரூ.100, ரூ.50 நோட்டுகள் முன்கூட்டியே வந்திருந்தன. மேலும் புதிய ரூ.2000 நோட்டும் வந்திருந்தது.

திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்க தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதேபோல தபால் நிலையங்களுக்கும் பணம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

வங்கிகளில் பணத்தை மாற்றுவதற்காக பொதுமக்கள் ஏராளமானோர் வருவார்கள் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்தது.

எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை காவலாளர்கள் மேற்கொண்டனர்.

காலையில் வங்கிகள் திறக்கப்படுவதற்கும் முன்பே ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்காக திருச்சியில் மக்கள் குவியத் தொடங்கினர். வங்கிகள் முன்பு காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

கண்டோன்மெண்ட் மெக்டொனால்ஸ் ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கியில் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக தனி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரூபாய் நோட்டுகளை மாற்ற வந்த அனைவரையும் காவலாளர்கள் வரிசையில் ஒழுங்குபடுத்தி நிறுத்தினர். மேலும் ஒவ்வொருவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.

இதேபோல ஒரு படிவமும் தனியாக வழங்கப்பட்டது. அந்த படிவத்தில் பணத்தை மாற்ற வந்தவரின் பெயர், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்டு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, பான் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ‘டிக்’ செய்து அதன் அடையாள எண்ணை குறிப்பிட்டு, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் எத்தனை என்பதையும், குறிப்பிட்டு, அவரது கையெழுத்திட்டு, இடது பெருவிரல் ரேகையை வைக்கவும், தேதியை எழுதவும் அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து படிவத்தை பெற்றவர்கள் அதனை பூர்த்திச் செய்துவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பாம்பன் பாலம் போல வரிசை நீண்டு கொண்டே போனது.

டோக்கன் வரிசைப்படி குறிப்பிட்ட நபர்களை மட்டும் வங்கியின் உள்ளே செல்ல அனுமதித்தனர். வங்கியின் உள்ளே 6–க்கும் மேற்பட்ட கவுண்ட்டர்களில் மக்களிடம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கி ஊழியர்கள் பெற்று அடையாள அட்டை ஆவணங்களையும் சரி பார்த்து விட்டு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு மற்றும் ரூ.100, ரூ.50 நோட்டுகளை வழங்கினர்.

சிலர் ரூ.2 ஆயிரம் நோட்டுத் தங்களுக்கு வேண்டாம் என கூறி ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகளை பெற்று சென்றனர்.

சிலர் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை ஆசையோடு வாங்கி கொண்டனர்.

புதிய 500 ரூபாய் நோட்டு வங்கிக்கு இதுவரை வரவில்லை. இதனால் 500 ரூபாய் நோட்டுகள் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர். ரூபாய் நோட்டை மாற்றி விட்டு வெளியே வந்ததும் அவர்களது முகத்தில் ஒரு மகிழ்ச்சி காணப்பட்டது. மேலும் புதிய நோட்டு வாங்கி வந்த சிலரிடம் வெளியில் காத்திருந்த நபர்கள் சிலர் ரூ.2 ஆயிரம் நோட்டை அவர்களிடம் வாங்கி ஆவலோடு பார்த்தனர்.

ஆனால், பழைய ஆயிரம் ரூபாய் நோட்டு பிடித்தது போல மக்களுக்கு இந்த புதிய 2000 ரூபாய் நோட்டு பிடிக்கவில்லை.

புதிய நோட்டு பார்ப்பதற்கு, குழந்தைகள் விளையாடும் போலி நோட்டுகள் போன்றே காட்சியளிக்கிறது.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வங்கிகளில் பணம் விநியோகிக்கப்பட்டன. திருச்சி மாநகர் மற்றும் மாவட்டப்பகுதியில் உள்ள அனைத்து வங்கிகளிலும் இதே நிலைமை காணப்பட்டன.

வங்கிகளில் பணம் மாற்ற ஒரு புறம் மக்கள் கூட்டம் இருந்தாலும், அதனை தங்களது கணக்குகளில் வைப்பு தொகையாக செலுத்தவும் கூட்டம் இருந்தது. வங்கிகளில் பணத்தை மாற்றுவதற்கு கூடுதலாக கவுண்ட்டர்கள் அமைக்க வேண்டும் என வரிசையில் நின்ற பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் வாகனங்களில் நடமாடும் ஏ.டி.எம்.கள், நடமாடும் வங்கிகளை ஆங்காங்கே முக்கியமான இடங்களில் நிறுத்தி பணத்தை செலுத்தவும், பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

மேலும், 2000 ரூபாய் மட்டுமே வங்கிகளில் இன்னும் 500 ரூபாய் நோட்டு தரப்படவில்லை என்று மக்கள் கூறினர்.

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
புதிய பொறுப்பாளர்கள் நியமித்து அதிரடி.. தமிழ்நாடு அரசியலில் பாஜக அதிரடி மூவ்!