Loksabha election 2024 nomination: அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் வேட்புமனுத்தாக்கல்!

By Manikanda Prabu  |  First Published Mar 25, 2024, 1:01 PM IST

மக்களவைத் தேர்தல் 2024இல் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து வரு


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் கடைசி நாள் வருகிற 27ஆம் தேதியாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் வருகிற 30ஆம் தேதியாகும்.

Latest Videos

undefined

வேட்புமனுக்களானது மேற்கண்ட நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே பெறப்படும். வேட்புமனுத்தாக்கல் செய்யும் நிகழ்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே வேட்புமனு செய்ய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் கடைசி நாள் என்பதால், திமுக, அதிமுக, பாஜக கட்சியை சார்ந்த, அக்கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

திமுக சின்னத்தில் போட்டியிடும் 33 வேட்பாளர்களும்  இன்று பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய அக்கட்சி தலைமை  அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, தலைநகர் சென்னையின் 3 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களான தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன் ஆகியோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தனது வேட்புமனு தாக்கல் செய்தார். செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் ராஜிடம் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளர் துரை.வைகோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திருப்பூர் மக்களவை தொகுதியில் ’இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுப்பராயன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இன்று மாலைக்குள் நெல்லை, மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!`

திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கலியபெருமாள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனு தாக்கல் செய்தார். கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

விருதுநகரில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் பாமக சார்பில் தருமபுரி வேட்பாளர் சவுமியா அன்புமணியும் இன்று தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இருக்கின்றனர். இதேபோல், ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்து தேர்தலுக்கு தயாராகி வருவதால், தமிழ்நாட்டு அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.

click me!