மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவினர் திருந்த வாய்ப்பாக அமையும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை முதலே பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். மதியம் 1 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 40.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆர்.கே.சாலை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வி.கே. சசிகலா தனது வாக்கை பதிவு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ஆம் தேதி தப்பு கணக்கு போட்ட அதிமுகவினர் திருந்த வாய்ப்பாக அமையும். மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு எங்களில் ஒருவர் திருந்துவதற்கான வாய்ப்பு இருக்கும். அவர்கள் போட்ட தப்புக் கணக்கு அவர்களுக்கு புரியும் என எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக சுட்டிக்காட்டி சாடினார்.
என்ன ஆபிசர் இதெல்லாம்? வாக்காளர்களுக்காக அதிகாரிகளுடன் மல்லுகட்டிய அண்ணாமலை
முன்னதாக, ஜெயலலிதா மறைவுக்கு அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறின. சிறை செல்வதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து விட்டு சென்றார் சசிகலா. ஆனால், அவரையும், அவரது குடும்பத்தினர் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க திட்டவட்டமாக எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து வருகிறார்.
அதேசமயம், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் பாஜக பயணித்து வந்தது. ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுடனான கூட்டணியை பாஜக முறித்து கொண்டது அதிமுக. அக்கட்சியை கூட்டணியில் இணைக்க பாஜக எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் பலனில்லை. இதையடுத்து, டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் இணைத்துக் கொண்டு தேர்தலை பாஜக. சந்திக்கும் நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவினர் திருந்த வாய்ப்பாக அமையும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.