
வேலை கிடைக்காத விரக்தியில், தன்னை கருணைக் கொலை செய்து விடுமாறு, தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்தவர் திருநங்கை ஷானவி பொன்னுசாமி (26). இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்தார். தனது பெண் தன்மையை மறைத்தே, இவர் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். பொறியியல் பட்டம் பெற்ற பின், ஏர் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
ஓராண்டு பணிபுரிந்த ஷானவி, கடந்த 2014 ஆம் ஆண்டு, முறையான பாலியல்
அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெண்ணாக மாறியிருக்கிறார். தனது பெயரையும் ஷானவி என்றும் அதனை தமிழ்நாடு அரசிதழிலும் பதிவு செய்திருக்கிறார். பெண்ணாக மாறியதை அறிந்த இவரது பெற்றோர் ஷானவியை ஏற்க மறுத்துவிட்டனர்.
பெற்றோர் கைவிட்ட நிலையில், மீண்டும் ஏர் இநதியாவில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளார். 4 முறை, நேர்முக தேர்வுக்கு ஷானவி அழைக்கப்பட்டும், இறுதி பட்டியலில் மட்டும் அவரது பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து போக்குவரத்து அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பில் இடம் பெற முடியும் என்றும் திருநங்கைகளுக்கு அல்ல என்றும் கூறியுள்ளது.
இதனை அடுத்து ஷானவி, உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகததிற்கு கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால், விமான போக்குவரத்து துறை சார்பில், இதுவரை எந்த பதிலும் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், ஷானவி பொன்னுசாமி, குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தன்னைக் கருணைக் கொலை செய்யுமாறு கூறியுள்ளார்.
இது குறித்து ஷானவி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்திய அரசாங்கமே எங்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாவிட்டால், தனியார் நிறுவனங்கள் எங்களுக்கு எப்படி வேலை கொடுக்கும்? கொஞ்ச காலம் போராடுவார்கள். பின்னர் பாலியல் தொழில் செய்தும், பிச்சை எடுத்தும் அவர்கள் போக்கில் தங்களை பழக்கப்படுத்திக் கொள்வார்கள் என்ற மெத்தனப்போக்கில் விமான துறை பதிலளிக்காமல் உள்ளது. இந்த வழக்கை தொடர வேண்டுமென்றால் இன்னும் அதிகப்படியான பணம் தேவைப்படுகிறது. அதனால்தான், கருணைக் கொலை செய்யுமாறு, குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஷானவி வேதனையுடன் கூறுகிறார்.