
மதுரை
போலி மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடியாக தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மருத்துவமனைகளில் ஏராளமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
டெங்கு காய்ச்சல் வார்டு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்டப் பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார். டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருபவர்களை பார்த்து நலம் விசாரித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
“மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் மற்றும் கிராம சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த நேரத்திலும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான மருந்து, மாத்திரைகள் கூடுதலாக இருப்பில் உள்ளன.
தொடர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பல்வேறு இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் நடத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து இடங்களிலும் நிலவேம்பு கசாயம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்.
தமிழகத்தில் போலி மருத்துவர்கள் 700-க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு சட்டத் திருத்தம் கொண்டுவந்து வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அதனை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.