அரசு மருத்துவமனையில் கைலி கட்டிக்கொண்டு உடற்கூராய்வு செய்யும் சலவை தொழிலாளி; சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ...

First Published May 11, 2018, 6:32 AM IST
Highlights
laundry worker doing postmortem at government hospital Video spreading on social media


திருச்சி 

திருச்சியில் உள்ள துறையூர் அரசு மருத்துவமனையில் சலவை தொழிலாளி உடற்கூராய்வு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உயரதிகார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரியுள்ளனர்.

திருச்சி மாவட்டம், துறையூரில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. துறையூர், கீரம்பூர், சொரத்தூர், குன்னுப்பட்டி, செல்லிப்பாளையம், மருவத்தூர், முருகூர், வெங்கடேசபுரம் என சுமார் 42 ஊராட்சி மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுதவிர விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் முதலில் துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னரே மேல் சிகிச்சைக்காக துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர். 

துறையூர் அரசு மருத்துவமனையில் 12 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். தலைமை மருத்துவராக தேவராஜன் இருக்கிறார். இவர் தற்போது விடுமுறையில் உள்ளதால் மருத்துவர் வேல்முருகன் பொறுப்பு தலைமை மருத்துவராக உள்ளார். 

ஆர்த்தோ மருத்துவர்கள் 2 பேர், செவிலியர்கள் 17 பேர், துப்புரவப் பணியாளர்கள் 4 பேரும்  உள்ளனர். சமையலர்கள் தற்போது தொடர் விடுமுறையில் உள்ளனர். அதனால் மருத்துவமனை உதவியாளர்களே சமையல் வேலையையும் செய்து வருகின்றனர். 

லேப் டெக்னீசியன் ஒருவர், உடற்கூராய்வு செய்பவர்கள் 3 பேர் என சுமார் 40 பேர் இங்கு பணியில் உள்ளனர். மருத்துவரின் பணி நேரம் காலை 7.30 முதல் மதியம் 1.30 வரை. இதில் மதியம் 12 மணி வரை வெளி நோயாளிகளை பரிசோதனை செய்வர். மற்ற நேரங்களில் பணி மருத்துவரக்ள் இருப்பார்கள்.

இந்த நிலையில் துறையூர் அரசு மருத்துவமனையில் கைலி கட்டியபடி ஒருவர் உடற்கூராய்வு செய்வதும், உடற்கூறு செய்யப்பட்ட உடலை ஊசியால் தைப்பதும் போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த காட்சியை பார்ப்பவர்கள் நிச்சயம் அதிர்ச்சி அடைவர். 

மருத்துவர் செய்ய வேண்டிய உடற்கூராய்வை கைலி அணிந்து செய்யும் நபர் யார்? என்று விசாரித்தனர். அந்த விசாரணையில் துறையூர் அரசு மருத்துவமனையில், மூன்று மாத ஒப்பந்த கால அடிப்படையில் சலவை தொழிலாளியாக வேலைபார்த்து வருபவர் என்றும், துறையூர் அருகே உள்ள வாலீஸ்புரத்தைச் சேர்ந்த வீரமணி என்பதும் தெரியவந்தது. இவர் பல மாதங்களாகவே உடற்கூராய்வு வேலையை செய்து வந்துள்ளதாராம். 

உடற்கூராய்வு செய்த பின்னர் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் உடலை தைக்கவும், துணியால் சுற்றி பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கும் பெரியசாமி, மதியழகன் என இரண்டு பணியாளர்கள் இருக்கும்போது சலவை தொழிலாளி வீரமணி எப்படி இந்த வேலையை செய்யலாம்? இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் சிகிச்சைகளிலும் அலட்சியம் காட்டக் கூடாது எனவும், அரசு மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்து பணியாற்ற வேண்டும் எனவும், சிகிச்சைக்கான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!