
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டை கண்டித்து மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட திமுக அமைப்பாளர் ஒருவருக்கு பிறந்தநாள் கேக் ஊட்டிய வடுவூர்
இன்ஸ்பெக்டர் ஜெயந்தியை காத்திருப்போர் பட்டியலி வைக்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய திமுக மாணவர் அணி அமைப்பாளர் சிவசந்திரன், திமுக சார்பில் கடந்த 24 ஆம் தேதி வடவூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தல் கலந்து கொண்டார்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலிசார் கைது செய்தனர். திமுக மாணவர் அணி அமைப்பாளர் சிவசந்திரனும் கைது செய்யப்பட்டு வடவூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அன்றைய தினம் சிவசந்திரனுக்கு பிறந்தநாள் என்பதால் திமுகவினர் அவருக்கு கேக் ஊட்டினர். அதேபோல பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஜெயந்தியும், சிவசந்திரனுக்கு கேக் ஊட்டினார். போலீஸ் நிலையத்திலேயே இன்ஸ்பெக்டர் பிறந்த நாள் கேக் ஊட்டியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக கொடியை ஏற்றி வைத்தது தொடர்பான சர்ச்சையில் சிக்கினார். அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், திமுக மாணவர் அணி அமைப்பாளர் சிவசந்திரனுக்கு கேக் ஊட்டி மேலும் சிக்கலில் மாட்டிக் கொண்டார். இதை அடுத்து, இன்ஸ்பெக்டர் ஜெயந்தியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளார்.