திமுக தலைவராக இல்லாமல் தமிழக முதலமைச்சராக விநாயகர் சதுர்த்திக்கு மட்டுமின்றி அனைத்து இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டியது முறையாக இருக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவராக இல்லாமல் தமிழக முதலமைச்சராக விநாயகர் சதுர்த்திக்கு மட்டுமின்றி அனைத்து இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டியது முறையாக இருக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது இல்லை என்ற விமர்சனம் இருந்து வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாடு முழுவதும் இந்துக்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வருகின்றனர், சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் மத்திய பாஜக இணையமைச்சர் எல் முருகன் விநாயகர் சித்தி கொண்டாடினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுப்படி 2047 இந்தியா வளர்ந்த நாடு என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்,
தமிழக முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு விருப்பம் இருந்தால் கொழுக்கட்டை வைத்து வழிபடலாம், அல்லது குறைந்த பட்சம் வாழ்த்தாவது கூறலாம், திமுக தலைவராக இல்லாமல் தமிழக முதலமைச்சராக விநாயகர் சக்திக்கு மட்டுமின்றி அனைத்து இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்துக் கூறினால் முறையாக இருக்கும், ஏன் பாஜக வெற்றிவேல் யாத்திரையின்போதுகூட முதலமைச்சர் வேல் பிடித்து சென்றார், அவர் எந்த பாகுபாடுமின்றி அனைத்து பண்டிகைகளுக்கும் அவர் வாழ்த்துக் கூற வேண்டும் என்பதே என் விருப்பம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது, எந்தபக்கம் திரும்பினாலும் கஞ்சா பரந்து விரிந்து கிடக்கிறது, இங்கு யாரும் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை ஜெயிலருக்கே பாதுகாப்பு இல்லை, காவல் துறைக்கு பாதுகாப்பு இல்லாத போது சாமானியர்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என கேள்வி எழுப்பிய அவர், குற்றவாளிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றார், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தனி குழு அமைக்க வேண்டும் என்றார்,
புதிய திட்டங்களை வரவேற்க வேண்டும், நாடு வளர்ச்சி அடைய வேண்டும், இளைஞர்கள் முன்னேற வேண்டும், இதில் ஒருபோதும் அரசியல் செய்யக்கூடாது, யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களை பரப்ப கூடிய யூடியூப் முடக்கப்படும், அது எந்த அமைப்பாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முருகன் கூறினார்.