
காஞ்சிபுரம்.
கூவத்துரில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுக குண்டர்களை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி.யிடம், காஞ்சிபுரம் மாவட்ட தலைநகர் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர்கள் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு அதிமுக-வினர் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், செய்தியாளர்களின் செல்போன்களை பறித்து வைத்தும், கேமரா உட்ளிட்ட உபகரணங்களை உடைத்தும் குடியாட்சியின் மாண்பை மீறியுள்ளனர் அதிமுக-வினர்.
இதனையடுத்து செய்தியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், செய்தியாளர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் போலீசார் ஈடுபட்டு அவர்களின் தர்ணா போராட்டத்தை கைவிட செய்தனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட தலைநகர் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பியிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், கூவத்துரில் செய்தியாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும்,தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும், செய்தியாளர்களுக்கு காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி மற்றும் மாவட்ட எஸ்.பி. ஜா.முத்தரசி ஆகியோரிடம் மனு அளித்தனர். அதனை ஆட்சியரும், எஸ்.பியும் பெற்றுக் கொண்டனர்.
மேலும், காஞ்சீபுரம் மாவட்டம் கூவத்தூரில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் செல்போன்களை பறித்த குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறித்தியும், அச்சம்பவம் தொடர்பான கண்டனத்தை பதிவு செய்யவும் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் இன்று கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பேட்சுகள் அணிந்தும் பணியாற்றுவோம் என்று முடிவு செய்துள்ளனர்.