
இந்திய விண்வெளித்துறையின் செயலாளராகவும், இஸ்ரோ மையத்தின் தலைவராகவும் தமிழகத்தைச் சேர்ந்த விண்வெளி ஆய்வாளர் கே.சிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன், அந்த பதவியில் ஏ.எஸ். கிரண் குமார் இருந்து வந்தார்.
நாளை(12ந்தேதி)ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ தனது 100-வது செயற்கைக்கோள் உள்ளிட்ட 31 செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இருக்கும் நிலையில் இந்த திடீர் அறிவிப்பை மத்திய அரசு வௌியிட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக கடந்த 2015ம் ஆண்டு, ஜனவவி 12ந்தேதியில் இருந்து கே. சிவன் பணியாற்றி வருகிறார்.
கடந்த 1980ம் ஆண்டு சென்னையில் உள்ள எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் ஏரோநாட்டிகல்பொறியியல் பட்டப்படிப்பை முடித்த கே.சிவன், பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எஸ்.சி நிறுவனத்தில் முதுகலை பட்டப்படிப்பு பயின்றார்.
அதன்பின் மும்பையில் உள்ள ஐ.ஐ.டி.யில் ஏரோஸ்பேஸ் துறையில் கே.சிவன் டாக்டர் பட்டம் பெற்றார்.
1982ம் ஆண்டு இஸ்ரோ மையத்தில் சேர்ந்த கே.சிவன், முதன் முதலில் பி.எஸ்.எல்.வி. திட்டத்தில் இணைந்து பணியாற்றினார். அதன் பின் இஸ்ரோ நிறுவனத்துக்கு பல்வேறு சேவைகளிலும், திட்டங்களிலும், வடிவமைப்புகளிலும் சிவன் பங்களிப்பு செய்துள்ளார்.
மேலும், இந்திய பொறியியல் அகாடெமி, இந்திய ஏரோநாட்டிகல் சொசைட்டி மற்றும் சிஸ்டம்சொசைட்டியில் பல்வேறு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 2014ம் ஆண்டில் சென்னைசத்தியபாமா பல்கலையில் கவுரவ டாக்டர் பட்டமும், 1999ம் ஆண்டு ஸ்ரீ ஹரி ஓம் ஆஸ்ரம்சார்பில் டாக்டர் விக்ரம் சாராபாய் விருதையும் சிவன் பெற்றுள்ளார்.