
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் சாலை விபத்தில் பலியாகி இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு காவலாளியிடம் கோவை மற்றும் நீலகிரி போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
ஜெயலலிதா தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் பகீர் தகவல்கள் ரெக்கை கட்டிப் பறந்தன. மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ். உள்ளிட்ட பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் இக்கொலை குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ராணுவப் பாதுாப்பு மிகுந்த கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இச்சம்பவத்தின் பின்னணியில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பான தகவல் வெளியே கசிந்ததும் கனகராஜ் தலைமறைவு ஆனதாகக் கூறப்படுகிறது.
கனகராஜை கைது செய்தால் அனைத்து ரகசியும் தெரியவந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சேலம் ஆத்தூர் இடையே இன்று நடைபெற்ற சாலை விபத்தில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த இக்கொலை வழக்கில் குற்றவாளியாகக் கருதப்படும் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி சர்ச்சையையும், பல்வேறு முரண்பாடுகளையும் ஏற்படுத்தி உள்ளது.