
கொடைக்கானல்
கொடைக்கானலில் இந்த வருடம் நல்ல மழை பெய்ததால், சீசனும் சீக்கிரம் தொடங்க வாய்ப்புகள் உள்ளது. நீங்களும் சுற்றுலா பயணம் செல்ல தயாராகலாம்.
கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் குளுமையான சீசன் நிலவும். இதனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாடு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருவர்.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக கொடைக்கானல் பகுதியில் போதிய மழை இல்லாததால் அங்கு வறட்சியான சூழல் நிலவியது. இந்த வருடம், கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த 3–ஆம் தேதி முதல் நல்ல மழை பெய்தது.
கொடைக்கானலில் பலத்த மழை கொட்டி தீர்த்ததால் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் கொடைக்கானல் நகர்ப்பகுதியில் காலை நேரத்தில் மிதமான வெப்பமும், பிற்பகல் முதல் மேகமூட்டம் சூழ்ந்து ரம்மியமாக காணப்படுகிறது.
இதன் காரணமாக இந்த வருடம் முன்கூட்டியே குளுமையான சீசன் தொடங்க வாய்ப்பு இருப்பதால் தற்போதே வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.
மேலும் அங்குள்ள பில்லர் ராக், பைன் மரக்காடு, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா இடங்களையும் பார்த்து இரசிக்க கூடுகின்றனர்.
இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள், தங்கும் விடுதி மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.