மழைநீர் வடிகால் பணிகளுக்கான தொகை ரூ.4,000 கோடி அல்ல, ரூ.5,166 கோடி என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத பெருமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக அதிகமான மழைப்பொழிவை சந்தித்தன. இதன் காரணமாக, இந்த 4 மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.
மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் தலைநகர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது, மழை விட்டு 4 நாட்கள் ஆகியும் மழை நீர் இன்னும் வடியவில்லை. அதேசமயம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றிலிருநது பாதுகாக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
undefined
தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார். அமைச்சர்கள், அரசு உயர்அலுவலர்கள் மேற்பார்வையில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் அதனை விரைவாக அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனாலும், ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள், ரூ.4,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் என்ன ஆனது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“சென்னை மாநகரில் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் பணிகள் நடந்தாக திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. நடந்து முடிந்த பணிகளின் பட்டியலை வெளியிட்டு இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட திமுக அரசு தயாரா?” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், மழைநீர் வடிகால் பணிகளுக்கான தொகை ரூ.4,000 கோடி அல்ல, ரூ.5,166 கோடி எனவும், அதில் ரூ.2,191 கோடி மதிப்பீட்டிலான பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மழைநீர் வடிகால் பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.5,166 கோடி. ஆனால் இதுவரை ரூ 2,191 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன. மீதமுள்ள 3,000 கோடி ரூபாய்க்கானப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.” என தெரிவித்தார்.
மேலும், “கொசஸ்தலை ஆறு வடிகால் (AG-ADB Fund) நீளம் 769 கி.மீ. அதற்கான பட்ஜெட் தொகை ரூ.3,220 கோடி. அதில் 523 கி.மீட்டருக்கு பணிகள் முடிவடைந்துள்ளது. இதற்காக ரூ.3,220 கோடியில் ரூ.1,903 கோடி செலவழித்து பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதேபோல், கோவளம் வடிகால் (ஜெர்மன் வங்கி நிதி நீளம் 360 கி.மீட்டர். அதற்கான பட்ஜெட் தொகை ரூ.1,714 கோடி. அதில், 162.72 கி.மீட்டருக்கு பணிகள் முடிவடைந்துள்ளது. இதற்காக செலவான தொகை ரூ.220 கோடியே 24 லட்சம். மேலும், எஸ்டிஎம்எஃப்-இல் 59.49 கி.மீட்டர் நீளத்துக்கான கால்வாய் பணிகளுக்கான மதிப்பீடு ரூ.232 கோடி. அதில், 47.78 கி.மீட்டருக்கான பணிகள் முடிந்துள்ளது. இதற்காக ரூ.68.35 கோடி செலவாகியுள்ளது.
இப்படி எதிர்க்கட்சிகள் கூறும் ரூ.4000 கோடி இதுதான். இப்போது நான் கூறிய பட்டியலின்படி, ரூ.5,166 கோடி வருகிறது. இந்த ரூ.5,166 கோடிக்கான பணிகளில் இன்னும் வேலை முடியவில்லை. வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை ரூ.2191 கோடிதான் செலவாகி உள்ளது. மீதத்தொகை உள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.” என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
Tamilnadu Rain Alert : இன்று 10 மாவட்டங்களிலும், நாளை 18 மாவட்டங்களில் கனமழை.! வானிலை மையம் எச்சரிக்கை தகவல்
முன்னதாக, “ரூ.4,000 கோடி செலவு செய்தும் சென்னை மிதக்கிறது எனச் சிலர் அரசியல் செய்கிறார்கள். இவ்வளவு பெரிய இயற்கைச் சீற்றத்தை, பெரும் சேதமின்றி கடந்திருக்க, அரசின் இது போன்ற திட்டங்கள்தான் காரணம் என்பதை மறந்துவிட வேண்டாம். அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் எதுவும் அமைக்கப்படவில்லை. இது பற்றி மேலும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை.” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் கே.என்.நேருவின் விளக்கத்தை அடுத்து, “மழைநீர் வடிகால் பணிகள் 98% நிறைவு பெற்றுவிட்டதாகவும், ஒரு மணி நேரத்தில் 20 செ.மீ மழையால் தேங்கும் நீர் வடியும் அளவுக்கு திறன் இருக்கிறது என்றும் கடந்த மாதம் திமுக அமைச்சர் கே.என்.நேரு கூறினார். ஆனால், இன்றோ இதுவரை 42% அளவில்தான் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அவர் கூறுகிறாரே” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.