
மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கந்தன் என்பவர் இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் நடந்த கொலை சம்பவத்தால் அப்பகுதி வாசிகள் பெரும் அச்சத்துக்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தனது மகளை, இன்று காலை 7.40 மணிக்கு கல்லூரிக்கு அழைத்து சென்று விட இன்று காலை ஏரிக்கரை சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள், கந்தனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை தடுக்க வந்த கந்தனின் மகளுக்கும் வெட்டுக்காயம் அடைந்தார். கந்தனை வெட்டிய மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, அருகில் இருந்தோர், போலீஸ் நிலையத்துக்கு தகவல் அனுப்பினர். பின்னர் அங்கு வந்த போலீசார், கந்தனின் உடலை மீட்டு, சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வெட்டுக்காயம் அடைந்த கந்தனின் மகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாகவே இந்த கொலை நடந்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலை குறித்து, மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராவை பார்த்தபோது, சாதாரணமாக நடந்து வந்த 3 பேர், பைக்கில் வந்த கந்தனை வெட்டியுள்ளது பதிவாகியுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எப்போதும் கூட்டம் மிகுந்து காணப்படும் ஏரிக்கரை தெருவில் நடந்த இந்த கொலை சம்பவத்தால், அப்பகுதி வாசிகள் பெரும் அச்சத்துக்கு ஆளாகி உள்ளனர்.