
கள்ளக்காதலை விட வற்புறுத்தியதால், கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு காரணமான மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே ஜக்காம்பேட்டையைச் சேர்ந்தவர் பஞ்சநாதன் (42). இவருக்கு ஜெயந்தி (35) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். மயிலம் அடுத்துள்ள கொணமங்கலம் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் பஞ்சநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். சஸ்பெண்ட் காலத்தை தொடர்ந்து, பஞ்சநாதனுக்கு மீண்டும் கிராம நிர்வாக அதிகாரியாக பணியில் சேர அழைப்பு வந்தது. ஆனால், அவர் பணியில் சேராமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பஞ்சநாதன் மயங்கிய நிலையில், அவருடைய மனைவி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சண்முகம் ஆகிய இருவரும் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் திண்டிவனம் மருத்துவமனைக்கு அழைத்துச் வெந்தனர். பஞ்சநாதன், தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக மருத்துவர்களிடம் ஜெயந்தி கூறியுள்ளார். உடனே பஞ்சநாதனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
பஞ்சநாதன் இறந்ததை தகவல் அறிந்த அவரது தம்பி விஜயகுமார் மற்றும் உறவினர்கள், திண்டிவனம் மருத்துவனைக்கு விரைந்தனர். பஞ்சநாதனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக விஜயகுமார், மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், திண்டிவனம் மருத்துவமனை வந்த போலீசார் பஞ்சநாதனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்தயி விசாரணையில், பஞ்சநாதனின் மனைவி ஜெயந்தியும், அவருடைய கள்ளக்காதலனான ஆட்டோ ஓட்டுனர் சண்முகநாதனும் சேர்ந்து பஞ்சநாதனை கொலை செய்துள்ளது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை ஜெயந்தியும், சண்முகமும் தப்பிச்செல்ல முயன்றனர். இதனை அறிந்த மயிலம் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சண்முகம் கூறியதாவது:
10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். ஜெயந்தி அடிக்கடி எனது ஆட்டோவில் பயணம் செய்வார். அப்போது, அவர் எனது தூரத்து உறவு முறை என்பது தெரிய வந்தது. பஞ்சநாதன் வீட்டில் இல்லாத சமயத்தில் ஜெயந்தியை வற்புறுத்தி அவருடன் உறவு கொண்டேன். இதன் பின்னர் நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்தோம். இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஜெயந்தியை அழைத்து கொண்டு சென்னைக்கு சென்று விட்டேன்.
இது குறித்து பஞ்சநாதன் கொடுத்த புகாரை அடுத்து, எங்களை அழைத்து விசாரித்தனர். பஞ்சநாதன் 3 பெண் குழந்தைகளின் நலன் கருதி, ஜெயந்தியை ஏற்றுக் கொண்டார். நானும் ஜெயந்தியை தொல்லை செய்ய மாட்டேன் என போலீசாரிடம் கூறிவிட்டு சென்று விட்டேன். ஆனாலும், ஜெயந்தியை மறக்க முடியவில்லை. மேலும் எங்களின் தொடர்பை நிறுத்த பஞ்சநாதன் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் பஞ்சநாதன் குடிபோதையில் இருந்தபோது நைலான் கயிற்றைக் கொண்டு கழுத்தை இறுக்கி கொலை செய்தோம். இந்த கொலையை மறக்க மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை அடுத்து நாங்கள் தப்பித்து செல்ல முயன்றோம் அப்போது எங்களை போலீசார் கைது செய்து விட்டனர். என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.