
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த வெள்ளி அன்று தீ விபத்து ஏற்பட்ட நிலையில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் ஸ்தல மரம் தீப்பற்றி எரிந்தது. இதனால் பக்தர்கள் பெரும் சோகம் அடைந்துள்ளனர்.
பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த வெள்ளி அன்று தீ விபத்து நிகழ்ந்து, வீர வசந்தராயர் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. பத்து நிகழ்ந்த இடத்தில் கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக ஆலய தூண்கள் அனலாய் கொதித்துக் கொண்டிருந்தன. தமிழக கோயிலில் நிகழ்ந்த இந்த
விபத்து இந்தியா முழுக்க பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதை ஆன்மிக அபசகுனமாகவே இந்துத்துவா தலைவர்கள் கருதி வருகின்றனர். மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து குறித்த விஷயங்கள் அடங்குவதற்கு முன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம் தீப்பிடித்து எரிந்தது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடை ஒன்றை மூடும் போது ஏற்றப்படும் கற்பூரத்தினால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்தல மரம் தீப்பிடித்து எரிந்ததும் கற்பூரத்தினால் என்று கூறப்படுகிறது.
கோயிலுக்கு வந்த பக்தர் ஏற்றி வைத்த கற்பூரத்தில் இருந்து இந்த தீ பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்தல மரம் சற்று காய்ந்த நிலையில் இருந்ததால், தீ மளமளவென பற்றி எரிந்து பரவியது. இந்த விபத்தில் ஸ்தல மரம் சேதடைந்தது.
சோழ மன்னர்களால், 12 ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. வடாரண்யேஸ்வரர் கோயில் ரத்தின சபை மிகவும் பிரசித்தி ஒன்றாகும். கடந்த வெள்ளி அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் பகுதியில் தீப் பற்றிய நிலையில், தற்போது திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் ஸ்தல மரம் தீப்பிடித்து எரிந்தது, பக்தர்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.